New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/26/seoul-2025-06-26-18-12-55.jpg)
தீ கொழுந்துவிட்டு எரிந்த மெட்ரோ... உயிர் தப்பிய பயணிகள்; வைரலாகும் பகீர் வீடியோ!
தென் கொரியத் தலைநகர் சியோலில், 481 பேர் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக இதில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
தீ கொழுந்துவிட்டு எரிந்த மெட்ரோ... உயிர் தப்பிய பயணிகள்; வைரலாகும் பகீர் வீடியோ!
தென் கொரியத் தலைநகர் சியோலில், 481 பேர் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் சியோல் மெட்ரோபாதை லைன் 5-ல் உள்ள இயூயினரு (Yeouinaru) மற்றும் மாபோ (Mapo) நிலையங்களுக்கு இடையே நடந்தது.
முதற்கட்ட விசாரணையில், தனது விவாகரத்து வழக்கின் தீர்ப்பு குறித்து கடும் கோபத்திலிருந்த 60 வயது மதிக்கத்தக்க நபர், ரயில் பெட்டிக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவர் மீது கொலை முயற்சி, தீ வைத்தல் மற்றும் ரயில்வே பாதுகாப்பு விதிமீறல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தில், சுமார் 400 பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலானோர் புகை சுவாசம் மற்றும் சிறிய காயங்களால் பாதிக்கப்பட்டாலும், அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ பதிவாகவில்லை.
ரயில் பெட்டியின் ஒரு பகுதி எரிந்து நாசமானதுடன், 2 பெட்டிகளில் புகை பாதிப்பும் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் சுமார் $280,000 டாலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சியோல் மெட்ரோவின் விபத்து, எப்படி பேரழிவு தவிர்க்கப்பட்டது என்பதைப் பற்றி பலரும் ஆச்சரியத்துடன் பேசுகின்றனர். கடந்த 2003-ல் டேகு சுரங்கப்பாதையில் 192 பேர் பலியான தீ விபத்துக்குப் பிறகு, சியோல் மெட்ரோ நிர்வாகம் தனது ரயில்களில் தீப்பிடிக்காத (Fire-resistant) மற்றும் தீயைத் தாங்கும் (Fire-retardant) பொருட்களைப் பயன்படுத்தும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியது. இது ரயில் பெட்டிகளுக்குள் தீ வேகமாகப் பரவுவதைத் தடுத்து, பயணிகளுக்கு வெளியேற போதுமான நேரத்தை வழங்கியது. உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதற்கான மிக முக்கியமான காரணமாகும்.
தீ விபத்து ஏற்பட்டதும், பயணிகள் பீதியில் உறைந்துவிடாமல், துரிதமாகச் செயல்பட்டனர். அவர்கள் உடனடியாக அவசரகால பிரேக்குகளை (Emergency Brakes) இயக்கி, ரயிலின் கதவுகளை கைமுறையாகத் திறந்து வெளியேறினர். மேலும், சிலர் ரயிலில் இருந்த தீயணைப்பான்களைப் (Fire extinguishers) பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றனர். வயதான மற்றும் உடல்நலமில்லாத பயணிகளுக்கு மற்றவர்கள் உதவி செய்தது, இக்கட்டான சூழ்நிலையிலும் மனிதநேயம் மேலோங்கியதைக் காட்டியது. ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்டனர். அவர்கள் பயணிகளை அமைதிப்படுத்தி, வெளியேற்ற வழிவகுத்ததுடன், அவசர சேவைகளை உடனடியாக அழைத்து தகவலளித்தனர்.
தீ விபத்து நடந்தவுடன், சுமார் 400 பயணிகள் சுரங்கப்பாதை வழியாக மிக விரைவாகவும், பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டனர். சியோல் மெட்ரோவின் நன்கு திட்டமிடப்பட்ட அவசரநிலை வெளியேற்ற நெறிமுறைகளின் (Emergency Evacuation Protocols) வெற்றியைக் காட்டுகிறது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகாலப் படையினர் சம்பவ இடத்திற்கு மிக விரைவாக வந்து, எஞ்சியிருந்த தீயை அணைத்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தனர். அவர்களின் உடனடி வருகை, நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.