சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் சர்வீஸ் சாலையில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு ஒரு இருசக்கர வாகனத்தில் நான்கு திருநங்கைகள் போக்குவரத்து விதிமுறையை மீறி பயணம் செய்தனர். அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது அவர்கள் மோதினர்.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு திருநங்கைகள் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர். அதே சமயம் அவர்கள் ஓட்டி வந்த வாகனம் மோதி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் உரிமையாளர்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாகன உரிமையாளர்களை திருநங்கைகள் தகாத வார்த்தைகளில் திட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் இன்று அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி, திருநங்கைகள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே சமயம் திருநங்கைகள் விபத்தில் சிக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
செய்தி: சக்தி சரவணன்.