சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், பொது மக்களால் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒரு கலைப் படைப்பு நிறுவப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் மாசுபாடு என்பது நிலத்தில் மட்டுமல்ல, அது கடல்கள் மற்றும் நீர்நிலைகளுக்குச் சென்று கடல்வாழ் உயிரினங்களை அச்சுறுத்துகிறது. கடற்கரைகளை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும், கடலில் பிளாஸ்டிக் கலப்பதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடலோர பிளாஸ்டிக்கால் ஆன கலைப் படைப்பு ஒன்றை அதிகாரிகள் நிறுவியுள்ளனர். சென்னை கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன இந்த கலைப் படைப்பு ஒரு பெரிய மீனைப் பிரதிபலிக்கிறது.
சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் இந்த கலைப் படைப்பு மே 21-ம் தேதி நடைபெற்ற நாடு தழுவிய கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு முன்னதாக அமைக்கப்பட்டது. இது மூன்றாவது ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டத்துடன் ஒத்துப்போகிறது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கலைப் படைப்பு நிறுவப்பட்டதன் வீடியோவைப் பகிர்ந்து எழுதுகையில், “இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கடற்கரையை தூய்மை செய்யும் திட்டத்தைக் (மெகா பீச் கிளீன் அப் திட்டம்) குறிக்கும் வகையில், சென்னையில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட இந்த கலைப் படைப்பை நாங்கள் அமைத்துள்ளோம். இது நமது பெருங்கடல்களில் மாசுபாட்டின் சோகமான யதார்த்தத்தை சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல், கடல் பல்லுயிர் பெருக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கையையும் எழுப்புகிறது.” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ நூற்றுக் கணக்கான லைக்குகளை குவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் பயனர் ஒருவர், “அருமை. நமது கடல் மற்றும் பெருங்கடல்களில் பிளாஸ்டிக்கைக் கொட்டுவதைத் தடுக்க அதிக விழிப்புணர்வும் நடவடிக்கையும் தேவை. இந்த பிளாஸ்டிக்குகள் மிதப்பதால், நன்னீர், கடலோர மற்றும் கடல் மீன்கள், பறவைகள், ஆமைகள் மற்றும் பலவற்றை மூச்சுத் திணறச் செய்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் நமது ஆறுகளை மாசுபடுத்துவதைத் தடுக்க இன்னும் நிறைய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர் கருத்துத் தெரிவிக்கையில், “நம்முடைய அயோக்கியத்தனத்தை உணர்ந்து, சுற்றுச்சூழல் குறித்த உணர்வுடன் வாழத் தொடங்க வேண்டிய நேரம் இது. நமது சுற்றுப்புறத்தையும் கடல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நாம் அவற்றை குப்பை கொட்டும் இடமாக மாற்றக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“