சென்னையில் புயல் பாதித்த இடங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தபோது, அவரது காரில் தொங்கியபடி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி உள்ளிட்டோர் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. மழையினால் ஒரு சில இடங்களில் மரங்கள் வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. கடலோர பகுதிகளில் வீடுகள் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில், புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின்னர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்ற முதலமைச்சர், சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார். மேலும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் காசிமேடு பகுதிக்கு காரில் சென்றபோது. சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil