viral video today : அப்பா. இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் அன்பு கடமை, தைரியம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. வளரும் பிள்ளைகளுக்கு தந்தைகளின் தேவை மிக மிக அவசியம். என்னதான் காலை முதல் இரவு வரை பிள்ளைகள் அம்மாவுடன் இருந்தாலும் இரவு லேட்டாக வரும் தந்தையை கண்டு ”ஐ.. அப்பா வந்தாட்டாருனு” சொல்லி ஓடாத குழந்தைகளே இல்லை.
அதிலும் போலீஸ் வேலையில் இருக்கும் அப்பாக்களின் நிலை மிக மிக மோசமானது.மக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையிலும் காவலர்கள் இரவு பகல் பாராமல்,பண்டிகை நாட்களை கூட கொண்டாடாமல் தங்கள் குடும்பங்களை பிரிந்து காவல் பணியில் இருப்பது கண்டிப்பாக பாராட்டுக்குரியது.
அவர்களின் பணிச்சுமை எவ்வளவு கடினமானது என்பதை குறிக்கும் வகையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒடிசாவை சேர்ந்த காவல் துறை அதிகாரி அருண் போத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் போலீஸ் அதிகாரி ஒருவர், காவலர் உடையில் வீட்டில் இருந்து பணிக்கு கிளம்புகிறார். அவரை போகவிடாமல் அவரின் மகன் காலை பிடித்துக் கொண்டு ”அப்பா, போகாதீங்கப்பா, என்னுடன் இருங்கள் அப்பா”என்று கண்ணீருடன் கதறுகிறான். செய்வதறியாமல் திகைக்கும் அந்த காவலர் தனது மகனிடம் அப்பா வேலைக்கு சென்று இரவு வந்துவிடுகிறேன் என்று சமாதானம் செய்கிறார். ஆனாலும் அவரின் மகன் அவரை விடுவதாக இல்லை. தந்தையின் காலை பிடித்தப்படி விடாமல் கெஞ்சி அழுகிறான்.
இந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. போலீஸ் வேலையில் இருப்பவர்களின் பணிச்சுமை எவ்வளவு கடினமானது என்பதை காட்டும் வகையில் இந்த நெகிழ்ச்சி வீடியோ அமைந்துள்ளது.