coimbatore | snake: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலையடிவார கிராமமான நெல்லித்துறை பகுதியில் வாழைக்கு அடுத்தபடியாக பாக்கு விவசாயம் பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. இங்கு சைலஜா என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்பில் உள்ள மோட்டார் அறையில் ராஜநாக பாம்பு ஒன்று புகுந்தது தெரிய வந்தது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் பாம்பு பிடி வல்லுனர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத் தொடர்ந்து மோட்டார் அறையின் மூலையில் பதுங்கியிருந்த ராஜ நாகத்தை லாகவகாமாக பிடித்தனர்.
பாம்பை ஆய்வு செய்ததில் அது 12 அடி நீளம் கொண்ட ஆண் ராஜநாகம் என தெரிய வந்தது. பின்னர், பிடிப்பட்ட ராஜநாகம் பாம்பை அடைக்க பயன்படுத்தப்படும் பிரத்தியேக துணி பையினுள் பாம்பை போக வைத்து, அதனை பாதுகாப்பாக கட்டி எடுத்து சென்றனர்.
இதன் பின்னர் பிடிபட்ட ராஜநாகம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணை வனப்பகுதியில் வனத்துறையினர் முன்னிலையில் விடுவிக்கப்பட்டது.
அபூர்வ வகையினை சேர்ந்த ராஜநாகம் கொடிய விஷ தன்மை கொண்டது. இவ்வகை பாம்புகள் பிற சிறிய பாம்புகளை மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்பவையாகும். இவை பெரும்பாலும் மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தென்படாது என்ற நிலையில் நெல்லித்துறையில் உள்ள பாக்கு தோப்பு மோட்டார் அறையினுள் அரிதாக காணப்பட்டுள்ளது.
மேலும் ராஜநாகத்தை பிடிக்கும் ஆட்கள் யாரும் மேட்டுப்பாளையம் வனத்துறையில் இல்லாத காரணத்தால் தனியார் பாம்பு பிடி வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ராஜநாகத்தை பிடித்து இதனை முழுமையாக இடம் மாற்றி நெல்லித்துறையில் இருந்து வெகு தொலைவிலுள்ள பில்லூர் வனப்பகுதியில் விடுவித்தார்கள்.
போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி ராஜநாகத்தை லாவாக கையாண்டு பிடித்த தனியார் பாம்பு பிடி வல்லுனர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“