New Update
/
Elephant: கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை அடிவார சரக பகுதியில் வனத்துறை பணியாளர்கள் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும் குட்டி யானை அருகில் இருப்பதை கண்டு உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் வழிகாட்டுதலின் படி, மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச் சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை மற்றும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
குட்டி யானை தாயைச் சுற்றியபடி இருந்ததால் சிகிச்சையளிக்க சிரமம் இருந்த நிலையில், குட்டி யானையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் யானை மற்றும் குட்டி யானை தொடர் கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கோவை மருதமலை அடிவார வனப்பகுதியில் நேற்று காலை உடல் நலக்குறைவால் படுத்திருந்த பெண் காட்டு யானை குட்டியுடன் கண்டறியப்பட்டது. நேற்று வியாழக்கிழமை முழுவதும் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இரண்டாவது நாளாக இன்று காலை முதல் குளுக்கோஸ் - நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நீர்ச்சத்து உணவுகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கிரேன் மூலமாக காட்டு யானை தூக்கி நிக்க வைக்கப்பட்டது. மேலும் அதிக அளவு தண்ணீர் யானை மீது பீச்சி அடிக்கப்பட்ட நிலையில், சோர்வாக காணப்பட்ட யானை மீண்டும் உடல் நலம் தேறி வருகிறது.
யானை நிற்கவைக்கப்பட்டவுடன் அங்கிருந்த நான்கு மாத குட்டியானை, தாய் யானையிடம் பால் குடித்தது. அதனைத் தொடர்ந்து பெண் காட்டு யானைக்கு கொடுக்கப்பட்ட உணவை சீராக எடுக்க துவங்கியுள்ளது. தொடர்ந்து காட்டு யானையின் உடல் நிலையை குறித்து கால்நடை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.