கோவை அருகே உள்ளது மேற்குத் தொடர்ச்சி மலை. இங்கு ஏராளமான வன விலங்குகள் உள்ளன. சமீப காலமாக வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் வலம் வர தொடங்கியது.
யானைகள் ஊருக்குள் புகுந்து மனிதர்களை தாக்குவது, வீடுகளை சேதப்படுத்துவது, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது நாள்தோறும் தொடர் கதையாக உள்ளது.
மேலும் காட்டுப்பன்றி, செந்நாய், சிறுத்தை என பல்வேறு வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு ஆடு, மாடு கோழி போன்றவற்றை வேட்டையாடி செல்கின்றன.
இந்நிலையில் கோவை மத்திய நகர் பகுதியில் உக்கடம், கோட்டைமேடு, பெரிய கடை வீதி, ரத்தினபுரி போன்ற இடங்களில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது.
இதனால் அச்சமடைந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத் துறையினர் வருவதற்கு முன்பே அங்கு இருந்து குரங்குகள் ஓடிவிட்டது.
இந்நிலையில் இன்று சிவானந்தா காலனியில் உள்ள கண்ணப்பன் நகர் பகுதிக்கு வந்த குரங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதேபோல் மருதமலை சாலை வடவள்ளி முல்லை நகர் பகுதியில் குரங்கு ஒன்று சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“