/indian-express-tamil/media/media_files/2025/08/02/local-vehicle-toll-2025-08-02-11-39-31.jpg)
சுங்கச் சாவடியில் வசூல் வேட்டை? டிரைவர் சரமாரி கேள்வி; வைரல் வீடியோ
தமிழகத்தின் 2-வது பெரிய நகரமாக வளர்ந்து வரும் கோவையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீலாம்பூரில் இருந்து மதுக்கரை செல்லும் 28 கிலோமீட்டர் சாலை இருவழிச் சாலையாக மட்டுமே உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரி வந்தனர். தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில், நீலாம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள 6 சுங்கச் சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடிவிட்டு, மதுக்கரையில் உள்ள ஒரு சுங்கச்சாவடியை மட்டும் செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவின்படி, ஆகஸ்ட் 1 முதல் மட்டும் கட்டண வசூல், தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டண விதிகளின்படி தொடரும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது, கோவை மரப்பாலம் பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மரப்பாலம் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் மதுக்கரை சுங்கச்சாவடி வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
மதுக்கரை, க.க.சாவடி, வேந்தாவளம், எட்டிமடை போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உள்ளூர் வாகனங்கள் இந்தச் சாலையை 2 அல்லது 3 முறைக்கு மேல் பயன்படுத்தும்போது, அவற்றிற்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக உள்ளூர் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகஸ்ட் 1 முதல் ரூபாய் 35 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சியரின் உத்தரவை மீறி ரூபாய் 55 வசூல் செய்யப்படுவதாக தனியார் சுற்றுலா மினி பேருந்து ஓட்டுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன், கோவை மாவட்டப் பதிவு எண் கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, மதுக்கரை சுங்கச்சாவடியில் அடையாள அட்டை இல்லாமல் பணம் கேட்கும் 2 நபர்களிடம், ஒரு ஓட்டுநர் "யார் நீங்கள், அடையாள அட்டை உள்ளதா?" எனக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.