கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பை ரம்மும், பொறித்த முட்டையுமே குணப்படுத்தி விடும் என்று காங்கிரஸ் கவுன்சிலர் வெளியிட்ட வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்துவங்கினாலும், துவங்கியது. எல்லாரும் மருத்துவர்கள் அளவில் கூட இல்லாமல், மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளாகவே மாறிவிட்டனர். இதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்ல. அந்த வகையில், தற்போது புதிதாக இணைந்துள்ளார் மங்களூரு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்.
அவர் அப்படி என்ன சொன்னார்? மேற்கொண்டு படியுங்கள்
கர்நாடக மாநிலம் மங்களூரு தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் ரவிச்சந்திர காட்டி. தனது மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவிவருவது கவலையளித்துள்ளது என்று வீடியோவில் தெரிவித்துள்ள அவர், கொரோனா பாதிப்பை வீட்டிலேயே குணப்படுத்தலாம் என்று ரம் மற்றும் பொறித்த முட்டைகளே இதற்கு போதும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரு தேக்கரண்டி மிளகை, 90 மில்லி ரம்மில் போட்டு விரலால் நன்கு கலக்கவும்,பின் அதனை குடிக்கவும். பிறகு 2 ஆம்லேட்டை சாப்பிட்டால், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாம் நம்மை காத்துக்கொள்ளலாம்.
மருந்து சொல்ல நான் மருத்துவர் இல்லை இதுவே எனது மருந்து. நான் இதை அரசியல்வாதியாகவும் சொல்லவில்லை. நாட்டின் குடிமகன் மற்றும் கொரோனா கமிட்டி உறுப்பினர் என்ற முறையில் தான் சொல்வதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு, பல அரசியல்வாதிகளை மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் மாற்றியுள்ளது. இது இந்தியாவில் மட்டும் நடைபெறும் நிகழ்வு அல்ல. அண்டைநாடான பாகிஸ்தானில் உள்ள முன்னணி அரசியல்வாதி, நாம் தூங்கினால், வைரசும் தூங்கிவிடும் என்று கூறிய நிகழ்வு சும்மா இருந்த நெட்டிசன்களுக்கு மெல்ல அவல் கிடைத்ததுபோல் ஆகிவிட்டது. நெட்டிசன்கள் அவரை மீம்களாக சித்தரித்து சமூகவலைதளங்களில் கிழித்து தொங்கப்போட்டு விட்டனர்.
நாம் தூங்கினால், வைரசும் தூங்கிவிடும் - பாகிஸ்தான் அரசியல்வாதி 'கலகல'
கடந்த மார்ச் மாதம், அசாம் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா, மாட்டு மூத்திரத்தை நாம் வசிக்கும் இடங்களில் தெளித்தால் அந்த இடம் சுத்தமடையும். மாட்டுச்சாணம், கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தவல்லது என்று தெரிவித்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம் ரிஷிகேஷில் நடைபெற்ற யோக் மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாம் மனநோய் வராமல் தடுத்தாலே, கொரோனாவை தவிர்த்துவிடலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.