கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளிங்கிரி சிவன் கோவில், இங்கு 7 வது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்ய தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில் பூண்டி வெள்ளிங்கிரி அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ளதால் அவ்வப் போது வன விலங்குகள் நடமாட்டம் அங்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள் போன்ற வன விலங்குகள் கோவில் வளாகத்துக்கு உள்ளே சுற்றி திரிவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை அங்கு உள்ள கடைகளில் வைக்கப்பட்டு இருக்கும் உணவுப் பொருட்களை தின்று, சூறையாடி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போது அந்த ஒற்றைக் காட்டு யானை பகல் நேரங்களிலே உணவு தேடி வர தொடங்கி விட்டது. இதனை தடுக்க வனத் துறையினர் உடனடியாக அடிவாரத்தில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்துக்குள் தற்காலிக வனத்துறை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்று அங்கு கடை வைத்து உள்ள வியாபாரிகள், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்.
கடந்த வாரங்களில் இரண்டு முறை காட்டு யானை அங்கு உள்ள பிரசாத கடையை உடைத்து, அங்கு இருந்த பிரசாதத்தை சாப்பிட்டுச் சென்றது.
இந்நிலையில் நேற்று பகல் நேரத்திலே கோயில் வளாகத்திற்கு முன்பு உள்ள பொம்மை கடை, பெட்டிக் கடைகளை உடைத்து அதில் உள்ளே வைத்து இருந்த பொருட்களை சாப்பிட்டு கடைகளை சூறையாடி சென்றதால் வியாபாரிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“