விலங்குகள் இடையே அன்பினால் அதிசயமான நட்பு நிகழ்வது உண்டு. அந்த வகையில், பசுவுக்கும் பாம்புக்கும் இடையேயான நட்பு ஏற்பட்ட அதிசய நிகழ்வின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக நாய்க்கும் பூனைக்கும் ஆகாது, பூனைக்கும் எலிக்கும் ஆகாது என்று விலங்குகள் இடையேயான பகையை நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும், சில இடங்களில் வீட்டில் வளர்க்கும் பூனையும் நாயும் ஃபிரண்ட்ஸ் ஆன நிகழ்வுகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.
ஆனால், மிகவும் வித்தியாசமாக பசுவும் பாம்புவும் நட்பாகி பழகும் நிகழ்வின் வீடியோ பார்க்கும் அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் ஒரு கருநாகப் பாம்பு படமெடுத்து எழுந்து நிற்கிறது. அதன் அருகே ஒரு பசுமாடு பாம்பை நட்புடன் முகர்ந்து பார்க்கிறது. அந்த பாம்புவும் பயப்படாமல் மாட்டைக் கடிக்காமல் அருகே அங்கே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பசுமாடு அந்த பாம்பை நாவால் நக்குகிறது. இதனால், சற்று பாதிக்கப்பட்டாலும் அந்த பாம்பு பசுவைக் கடிக்காமல் நட்புடன் அருகேயே இருக்கிறது. பசுவும் பாம்பை மீண்டும் நட்புடன் உச்சி முகர்கிறது.
பசுவும் பாம்பும் நட்பு பாராட்டும் இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிசயிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, “இதை விளக்குவது கடினம். தூய அன்பினால் கிடைத்த நம்பிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும்போது, பசு ஒரு பாம்பிடம் நம்பிக்கையுடன் நட்பு பாராட்டுவது அதியம்தான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"