பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்தநாளை கொண்டாட கேளிக்கை பூங்காவிற்கு சென்ற நபரை முதலை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, பூங்காவின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழும்பியுள்ளது.
நெஹிமியாஸ் சிப்பாடா என்பவர், தனது பிறந்தநாள் கொண்டாட ககாயன் என்ற பகுதியில் உள்ள அமயா கேளிக்கை பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சிறிய நீச்சல்குளம் போன்ற இடத்தில், முதலை மிதப்பது போல் இருந்துள்ளது. அசையாமல் இருப்பதை பார்த்து பொம்மை என நினைத்த சிப்பாடா, செல்பி எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்கியுள்ளார்.
முதலை அருகில் நின்றுகொண்டு செல்பி எடுக்கையில், முதலை மீது கை வைத்துள்ளார். அப்போது தான், அது உண்மையான முதலை என தெரியவந்துள்ளது. உடனடியாக சுதாரித்து கொண்டு வெளியே வருவதற்குள் அவருடைய இடது கையை முதலை நன்றாக பிடித்துகொண்டுள்ளது. பின்னர், சிறிது நேர போராட்டத்திற்கு பின் வெளியே வந்துவிட்டார்.
முதலையிடமிருந்து அந்நபர் கதறியப்படி ரத்தம் வடிந்தப்படி தப்பித்து வெளியே வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அவரது இடது கையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. அதே போல், வலது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அந்நபருக்கு பூங்காவில் முதலுதவி செய்து மருத்துவனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இவ்விவகாரத்தில் பூங்கா நிர்வாகம் மீது பாதிக்கப்பட்ட நபர் தரப்பில், எவ்வித வழக்கும் தொடரப்போவது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு கண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உள்ளூர் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமயா பூங்கா தலைமை அதிகாரி, ஒருபோதும் நிர்வாகம் கவனக்குறைவாக இருக்கவில்லை. தொற்றுநோய்க்கு முன் பள்ளி மாணவர்கள் பூங்காவை பார்வையிட வருவார்கள். அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்ற விபத்து நடப்பது இதுவே முதல் முறை. முதலை இருந்த பகுதியில் வேலிகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகை இருந்தும், இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil