சமூக வலைதளங்களில் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் என்கிற ஒரு ஆபத்தான உயிரைப் பறிக்கக் கூடிய ஒரு செயல் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால், பெற்றோர்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்கல்-பிரேக்கர் சேலஞ்ச் என்ற உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய சமூக ஊடக போக்கு பல தரப்பிலும் எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது.
ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் என்பதன் தமிழாக்கம் மண்டை உடைக்கும் சவால் என்பதாகும். உண்மையில் இந்த சவாலில் ஈடுபடுபவர்கள் மண்டை உடைவது நிச்சயம்.ஏன் உயிரிழப்பும் கூட ஏற்படலாம்.
டிக்டாக்கில் பரவி வரும் இந்த ஆபத்தான ஸ்கல் பிரேக்க சேலஞ்ச் படி, மூன்று அருகருகே நின்று கொண்டு எகிறி குதிப்பார்கள். அப்போது, நடுவில் நின்று குதிப்பவரின் கால்களை, ஒரத்தில் நின்று குதிக்கும் இரண்டு பேரும் தங்கள் கால்களால் தட்டிவிடுவார்கள். இதனால், நடுவில் எகிறி குதிப்பவர் கீழே நிற்காமல் மல்லாந்து தரையில் விழுவார். அப்படி விழும்போது நிச்சயமாக பின்னந்தலை தரையில் மோதி காயம் ஏற்படுவது உறுதி. இதனால் அந்த நபர் மயக்கம் அடையவோ அல்லது பலமாக காயம் அடையும்போது உயிரிழக்கவோ செய்யலாம்.
இந்த ஆபத்தான சவால் செயலை மாணவர்கள் தங்கள் பள்ளியில் சக மாணவர்களுடன் செய்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இளைஞர்கள் பலரும் இந்த ஆபத்தான ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்சில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போக்கு பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் மாணவர்கள், இளைஞர்களிடம் இந்த ஆபத்தான ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்சில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
இது போல விளையாட்டு என்ற பெயரில் ஆபத்தான செயல்கள் சமூக ஊடகங்களில் பரவுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு கிகி சேலஞ்ச் என்ற ஒன்று பிரபலமானது. இப்போது ஸ்கல் பிரேக்கர் என்ற பெயரில் ஒரு ஆபத்தான போக்கு பரவி வருவதை நிறுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.