DMK Banner Viral Video: சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி பலியான நிலையில், விக்கிரவாண்டியில் திமுக வைத்த அலங்கார வளைவு சாலையில் சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதுவும் ஏற்படவில்லை.
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுக ஜெயகோபால் வைத்திருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்ததால் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தபோது பின்னால் வந்த லாரியில் சிக்கி பலியானார்.
இந்த கொடூர விபத்து பொதுமக்களிடையே தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்துக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.சென்னை உயர் நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கண்டிப்புடன் உத்தரவுகளைப் பிறப்பித்ததால் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியனரும் விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்தியது.
திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்கள் கட்சி அனுமதியின்றி விதிகளை மீறி பேனர் வைக்காது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்மன்றத் தொகுதியில் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிற நிலையில், அங்கே திமுக, அதிமுக இரு கட்சிகளும் சில வாரங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவந்தன.
பிரச்சாரத்தின் ஒருபகுதியாக விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் திமுக சார்பில் அலங்கார வரவேற்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது. இந்த அலங்கார வளைவு திடீரென சரிந்து விழும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த அலங்கார வளைவு சாலையில் சரிந்து விழுவதற்கு ஓரிரு நொடிகளுக்கு முன்பு அதன்வழியே இண்டு கார்கள், ஒரு இருசக்கர வாகனம் கடந்து செல்கிறது. அவை சிறிது தாமதித்திருந்தாலும் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
திமுக தலைமை விதிகளை மீறி சாலைகளில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்க கூடாது என்று தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்திய நிலையில், விக்கிரவாண்டியில் வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து விழுந்திருப்பது தமிழக அரசியலில், அரசியல் கட்சிகள் பேனர்கள் வைப்பது பற்றிய நிலைப்பாட்டில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.