Advertisment

”தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ”...இந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்ட தமிழர்!

``நான் இந்தியன். எனக்கும் இந்தி பேசத் தெரியாது"

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக இளைஞர் சாமுவேல்

தமிழக இளைஞர் சாமுவேல்

இந்தி தெரியாததால் மும்பை விமான நிலையத்தில் தமிழக இளைஞரை அங்குள்ள குடியுரிமை அதிகாரி அவமதித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தை சேர்ந்த சாமுவேல் என்பவர் அமெரிக்காவில் பி.எச்.டி. படித்து வருகிறார். விடுமுறைக்காக மதுரை சென்றிருந்த அவர் மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கடந்த 8 ஆம் தேதி மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு  சென்றார்.

குடியேற்ற அதிகாரிகளின் அனுமதிக்காக வரிசையில் நின்றிருந்த சாமுவேலிடம் விமான நிலைய அதிகாரி இந்தியில் பேசியுள்ளார். அப்போது அவர் தனக்கு இந்தி தெரியாது என்றும், தனக்கு தெரிந்த ஆங்கிலம் அல்லது தமிழில் கேள்வி கேட்குமாறும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ:

அதற்கு அந்த அதிகாரி, வேறு கவுண்டரில் போய் நில்லுங்கள், இந்தியாவில் இருந்துகொண்டு இந்தி தெரியவில்லை என கடிந்து கொண்டதோடு, “இந்தி தெரியாதா? தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ!” எனவும் கூறியிருக்கிறார். மேலும், அவருக்கு விசா வழங்கவும் மறுத்துள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்த குடியுரிமை உயரதிகாரிகளிடம் சாமுவேல் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு உடனடி யாக விசா வழங்கப்பட்டு விமானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அமெரிக்கா சென்ற சாமுவேல் இந்த விவகாரத்தை சும்மா விடவில்லை. உடனே, தனக்கு மும்பை விமான நிலையத்தில் நேர்ந்த அவமானத்தை ட்விட்டரில் விரிவாக பதிவிட்டு, அதனை பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சசி தரூர் ஆகியோர்களுக்கு டெக் செய்தார்.

”நான் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். அதைக் காட்டிலும் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன். அதுதான் உங்களுக்கு பிரச்சினை எனில், நீங்கள் உங்களை இந்தியர் என அழைத்துக்கொள்வதற்கு தகுதியற்றவர்கள். நான் இந்தியன், இந்தி பேச மாட்டேன். முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள். அவரவர் தாய் மொழியைப் பேசும் இந்தியர்களை கேவலமாக நடத்தாதீர்கள்” என்று கூறியிருந்தார். சாமுவேலின் இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மும்பை விமான நிலைய அதிகாரிகள் சாமுவேலை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்தனர். இந்தி தெரியாத காரணத்தினால் தமிழக இளைஞருக்கு நேர்ந்த இந்த அவமானத்திற்கு அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் எதிர்ப்பு குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் சாமுவேல் விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட செய்தியை பகிர்ந்து, அதில், ``நான் இந்தியன். எனக்கும் இந்தி பேசத் தெரியாது" என்று பதிவிட்டுள்ளார்.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment