அமெரிக்காவில் ஒரு வீட்டுக்குள் புகுந்த அரியவகை இரட்டைத் தலை நாகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டில் இருந்த பெண், அதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஒரு வீட்டில் ஜென்னி வில்சன் என்ற பெண் வசித்து வந்தார். அவரது வீட்டின் சூரிய வெளிச்சம் உள்ள பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு இரட்டைத் தலை பாம்பு இருப்பதைப் பார்த்துள்ளார்.
இரட்டைத் தலை பாம்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜென்னி வில்சன் தனது மருமகனை உதவிக்கு அழைத்துள்ளார். முதலில் வித்தியாசமான இரட்டைத் தலை பாம்பை பார்த்து பயந்த ஜென்னிக்கு, இது அரிய வகை இரட்டை தலை பாம்பு என்பதால் அச்சத்தோடு ஆச்சரியமும் அடைந்துள்ளார். வீட்டுக்குள் புகுந்தது பெரிய பாம்பாக இருந்திருந்தால் நிச்சயமாக் ஜென்னி வில்சன் முழுவதுமாக பயந்து போயிருப்பார். ஆனால், இது ஒரு குட்டி பாம்பு என்பதால் ஜென்னி அந்த குட்டி இரட்டைத் தலை பாம்பை ரசிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த அரிய வகை இரட்டைத் தலை நாகம் மிகவும் அழகாக இருப்பதாக நினைத்த ஜென்னி வில்சன் அதை கொல்லாமல் மாறாக அதை பிடித்து ஒரு கண்ணாடி குடுவையில் அடைத்து வைக்க விரும்பியுள்ளார். அதோடு, ஜென்னி வில்சன் அந்த இரட்டைத் தலை நாகத்தை வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அரிய வகை இரட்டைத் தலை பாம்பைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் வியந்து போய் அதை பலரும் பகிர்ந்ததால் இரட்டைத் தலை நாகம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஜென்னி வில்சன் இந்த இரட்டைத் தலை நாகத்தை வீடியோ எடுத்து வெளியிட்டதோடு விட்டுவிடாமல், அதை பிடித்து, கேடாவ்பா அறிவியல் மையத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பாம்பை ஆராய்ந்த அறிவியல் மையத்தினர் இரட்டைத் தலை நாகம் ஒரு பிளாக் ராட் வகையை சேர்ந்த குட்டி பாம்பு என தெரிவித்துள்ளனர்.
அரிய வகை இரட்டைத் தலை நாகம் பற்றி அறிவியல் மையத்தினர் கூறுகையில், இந்த வகை இரட்டை தலை பாம்பு மிகவும் அரியவகையானது. இது போன்ற பாம்பு இலட்சத்தில் ஒன்று தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பாம்பை பயன்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"