Election 2019 Google CEO Sunder Pichai : கூகுள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுபவர் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை. தற்போது அவர் என்ன செய்தாலும் அது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ட்ரெண்டாகி விடுகிறது. இரண்டாம் கட்ட லோக் சபா தேர்தல் இன்று தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
ட்விட்டரில் பரவும் வதந்தி
சென்னையை சுந்தர் பிச்சை பிறப்பிடமாக கொண்டிருப்பதால், இன்று வாக்களிக்கவே அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துள்ளார் சுந்தர் பிச்சை என்று கூறி சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகளும் இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
சர்கார் திரைப்படத்தில் விஜய் வருவது போல், சுந்தர் பிச்சையும் வாக்களிக்க வந்துவிட்டார் என்ற கேப்சனுடன் ஒரு விரல் புரட்சியே என்று கூறி சுந்தர் பிச்சையின் இந்த புகைப்படத்தை பதிவேற்றி வருகின்றார்கள்.
அப்படி ஒரு விசயம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் மக்களே, இந்தியாவில் பிறந்த ஒருவர், இரட்டை குடியுரிமையை பெற்றிருந்தால், அவருக்கு இந்தியாவில் வாக்களிக்க உரிமை கிடையாது.
காரக்பூரில் எடுக்கப்பட்ட புகைப்படம்
மேலும், மேலே இருக்கும் புகைப்படம், அவருடைய கல்லூரிக்கு அவர் ஆலும்னி மீட்டிற்காக வந்த போது எடுக்கப்பட்டது. அதுவும் கூட தமிழகத்தில் இல்லை, மேற்கு வங்கம் மாநிலத்தில் இருக்கும் ஐஐடி காரக்பூரில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த நிகழ்விற்கு 2017ம் ஆண்டு அவர் வருகை புரிந்தது மட்டுமல்லாமல் அன்று எடுத்த புகைப்படங்களையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.