கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு அவ்வப்போது காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும். அந்தவகையில் தற்போது பெரிய தடாகம் வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை வடவள்ளி கணுவாய் சாலை வழியாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
பின்னர் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது. யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடிக்கும் யானையை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கணுவாய் மெயின் ரோட்டில் ஒற்றைக் காட்டு யானை சாலையில் வந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து அலறி ஓடினர். அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். யானை சாலையில் உலா வந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்தி: பி.ரஹ்மான்,கோவை