Viral Video: பாழடைந்த கிணற்றில் விழுந்து தத்தளித்த காட்டு யானையை வனத்துறை ஊழியர்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் போராடி மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் வனவிலங்குகளைப் பற்றிய வீடியோக்கள்தான். முன்பைவிட வனத்தைப் பற்றியும் வனவிலங்குகளைப் பற்றியும் விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. வனவிலங்குகளை துண்புறுத்தக்கூடாது, வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற மக்களிடையே அதிகரித்திருப்பது தெரிகிறது.
அதே வேளையில், வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் நமது வனத்துறை ஊழியர்களின் பணி அளப்பரியது. அவர்கள் எப்படி வனவிலங்குகளைப் பாதுகாக்கிறார்கள், வனவிலங்குகள் பாதிக்கப்பட்டால் எப்படி மீட்பு நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, வியப்பாகத்தான் இருக்கிறது.
அந்த வகையில், ஒடிஷா மாநிலம், காலஹண்டியில், ஒரு பாழடைந்த கிணற்றில் விழுந்து தத்தளித்த காட்டு யானையை வனத்துறை ஊழியர்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் போராடி மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A tusker rescued from an open well in Narla…
— Susanta Nanda (@susantananda3) October 10, 2024
Well done team Kalahandi North. pic.twitter.com/5Yd7pbnHyl
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு காட்டு யானையை கிணற்றில் விழுந்து மேலே ஏற முடியாமல் தத்தளித்த நிலையில், வனத்துறையினர் ஒரு ஜே.சி.பி இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி யானை மேலே ஏறுவதற்கு உதவி செய்கின்றனர். அந்த யானை கிணற்றில் இருந்து போராடி மேலே ஏறி வருகிறது. பின்னர், அந்த யானை வேகமாக காட்டுக்குள் செல்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த காட்டு யானையை வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
காலஹண்டி மாவட்டம், நார்லா தொகுதியில் உள்ள ஜம்படா கிராமத்தில் உள்ள கிணற்றில் புதன்கிழமை இரவு ஐந்து யானைகள் கொண்ட யானைக் கூட்டத்தைச் சேர்ந்த இந்த யானை தவறி கிணற்றில் விழுந்துள்ளது.
பலமுறை முயற்சி செய்தும் யானையால் தானாக கிணற்றில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதையடுத்து, வனத்துறையினர் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிணற்றில் இருந்து வெளியே வந்த யானை சிறிது தூரத்தில் காத்திருந்த அதன் யானைக் கூட்டத்துடன் போய் சேர்ந்தது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “நார்லாவில் திறந்த கிணற்றில் இருந்து ஒரு யானை மீட்கப்பட்டது. கலஹண்டி வடக்கு (வனப் பிரிவு) குழு சிறப்பாக செயல்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிணற்றில் விழுந்த யானையை மீட்ட வனத்துறை ஊழியர்களுக்கு நெட்டிசன்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.