அன்பு என்பது மனித இனத்தை தாண்டி விலங்கு பறவை என எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. அன்பு பிரபஞ்சமொழியாக இருக்கிறது. அதுவே இந்த உலகத்தில் எல்லா உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதற்கான அடிப்படையாக இருக்கிறது.
காட்டு விலங்குகளில் மிகவும் பெரிய விலங்கு யானை. உருவத்தில் மட்டுமல்லாமல் பலத்திலும் வலிமையிலும் யானைக்கு நிகர் வேறு எந்த விலங்கையும் ஒப்பிட முடியாது. யானை எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் அதற்குள் அன்பு இருக்கும்போது அது ஒரு குழந்தையைப் போல மாறிவிடும். குறிப்பாக, மனிதர்களால் வளர்க்கப்படும் யானைகள் அங்குசத்துக்கு பயந்து மட்டும் அது அடிபணிந்து நடப்பதில்லை. ஒரு கட்டத்தில் மனிதர்களின் அன்புக்கு அடிமையாகிப் போவதால்தான் கட்டுப்பட்டு நடக்கிறது.
யானைகளுக்கும் பாகன்களுக்கும் இடையேயான பாசம் இரு நண்பர்களுக்கு இடையேயான நட்பைப் போன்றது. யானைகள் பாகன்களிடம் சில நேரங்களில் ஒரு குழந்தையைப் போல குழைந்து அன்பைப் பொழியும். அதே போல பாகன்களிடம் இருந்து அன்பைப் பெறும்.
அப்படி, ஒரு யானை பாகனிடம் அன்புடன் நடந்துகொள்வதோடு, பாகனிடம் இருந்து முத்தம் பெறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பாகன் யானை அருகே வந்து நின்று உதடுகளைக் குவித்ததுமே யானை அதன் முகத்தை அவ்வளவு அழகாக கொண்டு வந்து முத்தத்தைப் பெறுகிறது. யானைக்கும் அதன் பாதுகாவலருக்கும் இடையே இருக்கும் அன்பு இந்த வீடியோவில் மிகவும் தெளிவாக தெரிகிறது. யானை அதன் பாதுகாவலரிடம் பலமுறை முத்தம் பெறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமென் தனது ட்விட்டர் பக்கத்தில், யானை அதன் பாதுகாவலரிடம் முத்தம் பெறும் வீடியொவைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமென் கூறியிருப்பதாவது, “இது போல அன்புக்கு அடிமையாக வேண்டும். விலங்குகளுக்கும் விலங்குகளின் பாதுகாவலர்களுக்கும் இடையேயான, இதுபோன்ற பல அழகான பினைப்புக்கு இது சாட்சியாக உள்ளது. இங்கே பொதுவான மொழி அன்பு. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
யானை அதன் பாதுகாவலரிடம் இருந்து முத்தம் பெறும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், யானை காட்டும் அன்பில் நெகிழ்ந்து கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“