Viral Video: பள்ளத்தில் விழுந்த யானை ஒன்று மேலே ஏற முடியாமல் போராடிக்கொண்டிருந்தபோது வனத்துறையினர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அந்த யானையை மேலே தூக்கிவிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில் யாராவது தும்மினார்கள் என்றால்கூட வைரலாகி விடுகிறது. குறிப்பாக வனவிலங்குகள் வீடியோ எதுவாக இருந்தாலும் நிச்சயமாக அது பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி விடும். இதற்கு காரணம், மனிதர்களுக்கு வனவிலங்குகள் மீது இருக்கும் ஆர்வம்தான் காரணம்.
மனிதர்கள் இடையே வனவிலங்குகள் மீது இருக்கும் அளவுக்கு அக்கறையும் விழிப்புணர்வும் இல்லை என்பது வருத்தமானதுதான். வனவிலங்குகள் பற்றி விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய வனத்துறை அதிகாரிகளான ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் பலரும் ட்விட்டரில் வனவிலங்குகளின் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காட்டில் வெட்டி வைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் பள்ளத்தில் விழுந்த யானை ஒன்று மேலே ஏறுவதற்காக போராடிக் கொண்டிருக்கும்போது அந்த யானையை ஜே.சி.பி இயந்திரம் மூலம் மேலே தூக்கிவிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதாராமென் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்துவிட்ட யானை பள்ளத்தில் இருந்து மேலே ஏறுவதற்கு போராடுகிறது. ஆனால், அதனால் ஏற முடியவில்லை. ஆனாலும், யானையின் விடாமுயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும். யானை பள்ளத்தில் விழுந்து மேலே ஏற முடியாமல் போராடுவதைப் பார்த்த வனத்துறையினர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் யானையை மேலே தூக்கி விடுகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம், கூர்க்கில் நடந்துள்ளது.
யானையை மீட்டது குறித்து இந்த வீடியோவைப் பற்றி சுதாராமென் குறிப்பிடுகையில், “காடு மற்றும் வனவிலங்குகள் என்று வரும்போது, விஷயங்கள் கணிக்க முடியாது. அந்த சந்தர்ப்பங்களில் விதிமுறைகளின் உதவி குறைவுதான். முந்தைய பணி அனுபவம் மற்றும் சில மன உறுதி நன்றாக வேலை செய்யலாம். இது கூர்க்கில் எப்போதோ நடந்த சம்பவம் இது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"