இன்பம் துன்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. எல்லா உயிர்களுக்கும் என்று கூறும்போது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இன்பம் துன்பம் பொதுவானதுதான். அதிலும் யானைகள் மிகவும் நுண்ணுணர்வு மிக்கவை. யானை ஒரு சமூக விலங்கு. அதனாலேயே, அது கூட்டமாகவும் நுண்ணுணர்வுடனு ம் இருக்கின்றன.
காட்டில் தாய் யானை ஒன்று இறந்த தனது கன்றின் உடலை அங்கேயே விட்டுவிட்டுச் செல்லாமல் உடன் எடுத்துச் செல்லும் இதயத்தை நொறுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரிகளான ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் சிலர், வனங்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவை சமூக ஊடகப் பயனர்கள் இடையே வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில், காட்டில் தாய் யானை ஒன்று இறந்த தனது கன்றின் உடலை அங்கேயே விட்டுவிட்டுச் செல்லாமல் உடன் எடுத்துச் செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து பர்வீன் கஸ்வான் குறிப்பிடுகையில், “இதனால்தான் யானைகள் நுண்ணுணர்வு மிக்க உயிர்கள் என்று அழைக்கப்படுகின்றன. யானைகள் தங்கள் இறந்த கன்றுகளை உடன் சுமந்து செல்வதாக அறியப்படுபவை. யானைகள் இறந்த கன்றுகளை விட்டுச் செல்ல விரும்பவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அஸ்ஸாம் மாநிலம் கோரேஸ்வரில் இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது.
யானைகளின் இந்த நடத்தை பற்றி எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளிடம் இந்த நடத்தை உள்ளன. கடந்த சில வருட களப்பணியின் போது இதுபோன்ற பல நிகழ்வுகளை நான் தனிப்பட்ட முறையில் பதிவு செய்துள்ளேன். இந்த நடத்தையின் ஒரு அம்சம் பற்றிய எனது தற்போதைய ஆய்வுக் கட்டுரை ஒன்று.
இந்த புகைப்படம் @NANDANPRATIM என்பவர் பதிவிட்டுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
யானை தன்னுடைய இறந்த கன்றை உடன் எடுத்துச் செல்லும் இதயத்தை நொறுக்கும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் யானையின் நுண்ணுணர்வை உணர்ந்து உருக்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"