மனிதர்கள் மற்றும் யானைகள் இடையே மோதல் நடக்கும்போதெல்லாம், மனிதர்களுக்கு யானைகளைப் பழியே சொல்வதே வழக்கமாக இருக்கிறது. ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம், வாகனங்களை வழிமறித்து யானைகள் அராஜகம், நாசம் செய்த யானைகள் என்று சொல்வதே வாடிக்கையாகிவிட்டது. யானைகள் வழித்தடத்தில் கட்டங்களைக் கட்டிவிட்டு யானைகள் மீது பழி சொன்னால் எப்படி நியாயமாகும். காடுகளில் சாலையை அமைத்துவிட்டு, யானைகள் வழி மறிக்கிறது என்று சொன்னால் எப்படி சரியாகும், இந்த பூமி மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சூழ்நிலைகள் மாறிவிட்டாலும், மனிதர்கள் மற்றும் யானைகள் இடையே மோதல் நடக்க வாய்ப்பு உள்ள இடங்களில் யானைக்கும் பாதிப்பு இல்லாமல் பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் செயல்படுபவர்கள் வனத்துறை ஊழியர்கள்தான். அதனால், வனத்துறையினரின் பணி மிகவும் சவாலானது.
அந்த வகையில், ஹரித்துவார் நகரத்தில் இரவு நேரத்தில் 5 யானைகள் வரிசையாக உலாவந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி வைபவ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியொவில் யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நடந்து செல்கின்றன. வனத்துறையினர் தூரத்தில் நின்றுகொண்டு யானைகள் வருவதை எச்சரிக்கிறார்கள்.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி வைபவ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஹரித்வார் நகரத்திற்கு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. யானைகள் கூட்டம் பொதுவாக நகர்ப்புறங்களைக் கடந்து விவசாய வயல்களில் பயிர்களை சாப்பிடுவதற்காக செல்கிறது. மக்கள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் சவாலான பணியாகும், இது ஊழியர்களால் 24x7 செய்யப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“