New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/05/New-Project43.jpg)
Elephants
Elephants
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் காட்டு யானை, மான்,காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களில் நுழைந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை பாகுபலி என்று மேட்டுப்பாளையம் பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் யானையும், மற்றொரு யானையும் சேர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியேறி எப்போதும் பரபரப்பாக காணப்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஊட்டி சாலையை கடந்து சாலையின் மறுபுறம் இருந்த தனியாருக்கு சொந்தமான உணவகத்தின் காம்பவுண்டிற்குள் நுழைந்தது.
பின்னர் மீண்டும் வனப்பகுதிக்கு செல்ல முயன்ற இரு காட்டு யானைகளும் தனியார் உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன. மேட்டுப்பாளையம் வனத்துறையினரின் முயற்சியால் சற்று நேரத்திற்கு பின்னர் அருகில் இருந்த மற்றொரு பாதை வழியாக மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்பபட்டது.
இதனால் ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் பரபரப்பாகவும், வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் ஊட்டி சாலையை கடந்த இரு காட்டு யானைகளைக் கண்டு அச்சாலையின் வழியே வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைந்தனர்.
கோவையில் உணவக வளாகத்திற்குள் புகுந்த பாகுபலி!#Coimbatore | #Elephant pic.twitter.com/E9VkBvDSJ5
— Indian Express Tamil (@IeTamil) May 31, 2023
வன ஆர்வலர்கள் கூறுகையில், "சமீப காலமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையின் வலசைப்பாதைகளை மறித்தும், மறைத்தும் கட்டிடங்கள் அதிக அளவில் தனியாரால் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியே கான்கிரீட் காடுகளாக மாறி வருகின்றன. இதனால் யானைகள் வேறு வழியின்றி ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதே வேளையில் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
வனத் துறையினர் யானைகளின் வலசைப்பாதைகளை கண்டறிந்து அப்பகுதியில் இருக்கும் தனியார்களின் கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் மட்டுமே காட்டு யானைகள் எளிதாக வனப்பகுதியின் ஒரு புறமிருந்து மற்றொரு புறம் கடந்து செல்ல இயலும். இதுபோலத் தான் நேற்று முன் தினம் மாலை ஊட்டி சாலையை கடந்த பாகுபலி உள்ளிட்ட இரு காட்டு யானைகள் தனியாருக்கு சொந்தமான உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன.
வனத்துறையினரின் முயற்சிக்குப்பின்னரே மற்றொரு பாதை வழியாக காட்டு யானைகள் இரண்டும் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றன" எனக் கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.