facebook viral videos : பெங்களூருவில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை பற்றி பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஓவியர் ஒருவர் எடுத்த முயற்சி ஒட்டு மொத்த நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இந்தியா இப்போது பேசிக் கொண்டிருப்பது சந்திரயான் 2 விண்கலம் பற்றி தான். கூடிய விரைவில் தரை இறங்கவுள்ள சந்திரயான் 2 நினைத்து அனைவரும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பெங்களூரில் 3D ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமி மேற்கொண்ட இந்த முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
சமீபத்தில் பாதல் நஞ்சுண்டசுவாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விண்வெளி வீரர் போன்ற உடை அணிந்து கொண்டு, நிலவில் நடப்பதை போன்று காட்சிகள் இருந்தன. ஆனால் அது உண்மையில் நிலவும் இல்லை. நடந்தவர் விண்வெளி வீரரும் இல்லை.பெங்களூருவின் யஷ்வந்த்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஹீரோஹலி, துங்கநகர், விஷ்வனீதம் போன்ற பல பகுதிகளில் உள்ள சாலைகள் தான் அவை.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ள இந்தச் சாலையை எந்த அரசு அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்யவும் இல்லை, அதனைச் சீரமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பாதல் நஞ்சுண்டசுவாமி தனது குகுவினருடன் சேர்ந்து எடுத்த முயற்சி தான் அந்த வீடியோ.
பாதல் நஞ்சுண்டசுவாமி பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்னைகளை தனது ஓவியத்தின் மூலம் வெளிபடுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் வைரலானது. இந்நிலையில், சேதமடைந்துள்ள சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன்.