சென்னையில் பீஞ்சல் புயலில் தூக்கி எறியப்பட்ட கார் எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து இந்தியா டுடே இணைய பக்கம் இணைய பக்கம் சரிபார்த்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு இந்தியா டுடே (India Today) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனிடையே, வங்கக் கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் நவம்பர் 30 அன்று காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடந்தது. இந்தப் புயல் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப் போட்டது. தலைநகர் சென்னையில் பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும், கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பின்னர் அவை சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பீஞ்சல் புயலில் தூக்கி எறியப்பட்ட கார் எனக் குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்த உண்மைத் தன்மையை இந்தியா டுடே சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவை பகிர்ந்துள்ள ஒரு பயனர், “கடற்கரைக்கு அருகில் கனமழை தீவிரமடைந்து வருகிறது, இது வரவிருக்கும் மணிநேரங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. தயவு செய்து விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் மற்றும் முற்றிலும் தேவைப்படாவிட்டால் வீட்டிற்குள்ளேயே இருங்கள். கவனித்துக்கொள்! #ChennaiRainsUpdate #chennairain" என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மை சரிபார்ப்பு
வைரலான வீடியோவின் முக்கிய பிரேம்களைத் தலைகீழாகத் தேடிப் பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 13, 2016 தேதியிட்ட சி.என்.என் இன்டர்நேஷனல் பதிவிட்ட வீடியோவை கண்டறிந்துள்ளனர். அந்தப் பதிவில், “வர்தா புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசியது மற்றும் கனமழை பெய்தது. இதில் கார் கவிழ்ந்தது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த வீடியோ சமீபத்தியது அல்ல எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சி.என்.என் ஊடகத்தின் வீடியோ மூலம், சென்னையில் உள்ள டி.எல்.எஃப் கார்டன் சிட்டியில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டதை கண்டறிந்துள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, புயலின் போது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
டிசம்பர் 12, 2016 இல் இருந்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி அறிக்கையில், அந்த வீடியோ தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் புயல்களுக்கு வழிவகுத்த வர்தா புயல் வீடியோவாக இருந்தது. அந்த நேரத்தில், பல உள்ளூர் தெலுங்கு செய்தி சேனல்களும் இந்த சம்பவத்தை ஒளிபரப்பின. இச்சம்பவம் தொடர்பாக டி.வி5 செய்தி வெளியிட்டுள்ள காணொளிக் காட்சியை கீழே காணலாம்.
இறுதியில், சென்னையில் பீஞ்சல் புயலில் தூக்கி எறியப்பட்ட கார் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ, 2016 ஆம் ஆண்டு சென்னையைப் புரட்டிப் போட்ட வர்தா புயலின் போது எடுக்கப்பட்டது என்றும், அந்த வீடியோவுக்கு பீஞ்சல் புயலுக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும், பழைய வீடியோ சமீபத்தில் பகிரப்பட்டது என்பதும் தெளிவாகி இருப்பதாக இந்தியா டுடே இணைய பக்கம் தெரிவித்துள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு இந்தியா டுடே (India Today) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.