பா.ம.க தலைவர் அன்புமணி ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டி தவறாக பரிசோதித்தார் எனக் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய பக்கம் சரிபார்த்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
கடலூர் மாவட்டம் கண்டக்காடு கிராம பொதுமக்களுக்கு, பா.ம.க சார்பில் நிவாரணம் மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.8) அன்று நடைபெற்றது. இந்த முகாமில், பா.ம.க தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். அப்போது, அப்பகுதி மக்களுக்கு அவரே மருத்துவ பரிசோதனையும் செய்து வைத்தார்.
இந்நிலையில், “உலகத்திலேயே ஸ்டெத்தஸ்கோப்பை காதில் மாட்டாமல் நோயாளியை செக் செய்யும் அதிசய டாக்டர்......” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் வைத்தபடி சிறுவனை பரிசோதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஸ்டெத்தஸ்கோப்பை காதில் மாட்டாமல் கழுத்தில் வைத்து தவறாக பரிசோதிக்கும் அன்புமணி ராமதாஸ் என்று கூறி அந்தப் புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் ஆய்வு செய்துள்ளது.
புகைப்படத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்க்கப்பட்டுள்ளது. அப்போது, “கடலூர் அருகே மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் அன்புமணி ராமதாஸ்” என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு டிச.8 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது..
அதில், 1:02 பகுதியில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் சிறுவனுக்கு ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி பரிசோதிக்கும் அன்புமணி ராமதாஸ் தனது தவறை உணர்ந்து 1:09 பகுதியில் கழுத்தில் இருக்கும் ஸ்டெத்தஸ்கோப்பை முறையாக காதில் வைத்து சரியான முறையில் அச்சிறுவனுக்கு பரிசோதனை செய்கிறார். இதே காட்சியை மின்னம்பலம் ஊடகம் வெளியிட்டுள்ள காணொலியில் 35:59 பகுதியிலும் காணலாம்.
இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், மருத்துவ பரிசோதனையின் போது ஸ்டெத்தஸ்கோப்பை காதில் மாட்டாமல் கழுத்தில் வைத்து தவறாக பரிசோதிக்கும் அன்புமணி ராமதாஸ் என்று வைரலாகும் புகைப்படம் தவறானது என்றும், உண்மையில் அவர் தன் தவறை உணர்ந்து மீண்டும் சரியாக ஸ்டெத்தஸ்கோப்பை காதில் வைத்து சிகிச்சை அளிக்கிறார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.