Thiruvalluvar | Fact Check: ஜி.யு போப் எழுதிய புத்தக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக புகைப்படம் ஒன்றை தினமலர் பகிர்ந்திருந்தது. அந்த அட்டைப்படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். “காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தைப் போட்டு புத்தகம். மொழி பெயர்ப்பு ஆர்.என்.ரவி அல்ல ஜி.யு.போப்” என்று குறிப்பிட்டு அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
முதலில், வைரலாகும் திருக்குறள் அட்டைப்படத்தில் ஜி.யு போப் என்கிற பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், அதனை ரிவர்ஸ் சர்ச் (reverse image search) முறைக்கு உட்படுத்தியுள்ளனர். அதன்முடிவில், கோபா (Kobo) என்கிற இணையதளத்தில் ஜி.யு போப் பெயர் இடம்பெற்றுள்ள அந்தப் புத்தக அட்டைப்படம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால், அட்டைப்படத்தில் ஜி.யு போப் பெயர் பொருந்தாத வகையில் இடம்பெற்றிருந்ததை கண்டறிந்துள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (NewsChecker.in ) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
இதனையடுத்து, அந்த குறிப்பிட்ட புகைப்படம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்முடிவில், சத்குரு சிவாய சுப்ரமுனியஸ்வாமி தோற்றுவித்த ஹிமாலயன் அகாடமியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இடம்பெற்றுள்ள புத்தகத்தில் எழுதியவர் பெயர் சத்குரு சிவாய சுப்ரமுனியஸ்வாமி என்றே இடம் பெற்றிருந்தது. இதனால், அந்தப் புத்தகத்தின் முழுமையான பதிப்பு குறித்து தேடப்பட்டது. அந்தத் தேடலின் முடிவில் ஹிமாலயன் அகாடமி இணையதள பக்கத்திலேயே அது தொடர்பான பி.டி.எஃப் பதிப்பு கிடைத்துள்ளது.
அதன் பதிப்புரை பக்கத்தில் “The cover art and the image of lord murugan opposite the title page are by Thiru. S. Rajam of Chennai.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஓவியத்தில் உள்ள ஓவியரின் கையெழுத்தும் ”S Rajam – A Rare Gem Indeed ” என்கிற பெயரில் சுந்தரம் ராஜம் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ள பக்கத்தில் உள்ள ஓவியங்களில் உள்ள கையெழுத்தும் ஒன்றே என்பதையும் அறிந்துள்ளனர்.
இதனையடுத்து, ஓவியர் எஸ் ராஜமின் மருமகனும், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிப்பவருமான வி.எஸ்.ரமணாவைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, குறிப்பிட்ட அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் சுந்தரம் ராஜம் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஹிமாலயன் அகாடமி ஆன்மீக கலை அருங்காட்சியகம் பக்கத்தில் எஸ்.ராஜம் வரைந்த தேர்ந்தெடுத்த 108 திருக்குறள்களின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
எஸ்.ராஜம் 1919 ஆம் ஆண்டு பிறந்து 2010 ஆம் ஆண்டில் மறைந்தவர். ஜி.யு போப் வாழ்ந்த காலகட்டம் அதற்கும் முந்தையது ஆகும். மேலும், சிவாய சுப்ரமணிய சுவாமிகள் எழுதிய புத்தகத்தில் அவருக்கு முன்பாக திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்தவர்கள் என்கிற ஆதாரங்கள் பகுதியில்தான் ஜி.யு போப் பெயர் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜி.யு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக பரவிய செய்தி தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகி உள்ளதாகவும், எனவே, இது போன்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (NewsChecker.in ) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.