தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக மீண்டும் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் சார்பில் ஆய்வு செய்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய அவர், ”நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்தவன், இந்து என்று அழைத்தால் நான் இந்து, முஸ்லிம் என்று அழைத்தால் நான் ஒரு முஸ்லிம். எனக்கென்று ஜாதியும் மதமும் கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்” என்று கூறினார். தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக இதனை அன்றே வலதுசாரியினர் தவறாக திரித்து பரப்பி வந்தனர்.
இந்நிலையில், “நான் ஒரு கிறிஸ்டியன்..! உதயநிதி பெருமிதம். எங்கு பார்த்தாலும் நட்சத்திரம் ஜொலிக்கிறது..! ஒட்டு மொத்த உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய விழா கிறிஸ்துமஸ் தான்.. இந்த விழானா எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.. சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் நிகழ்சியிலேயே சொன்னேன் நானும் கிறிஸ்டியன்தான் என்று.. இன்று மீண்டும் சொல்கிறேன்.. பெருமையோடுசொல்கிறேன்.. நானும் ஒரு கிறிஸ்டியன் தான்..” என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக மீண்டும் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் ஆய்வு செய்துள்ளது. உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்துள்ளனர். பாலிமர் செய்தி நடிசம்பர் 18 அன்று இது தொடர்பாக முழு நீள காணொலியை அதன் யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தது. அதில் 1:00 பகுதியில் பேசும் உதயநிதி ஸ்டாலின், “சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, “நானும் ஒரு கிறிஸ்டியன் தான்” என்று பெருமையாகக் கூறினேன். உடனே உங்களுக்கு தெரியும் பல சங்கிகளுக்கு பயங்கர வயிற்று எரிச்சல். நான் இன்று மீண்டும் உங்கள் முன்பாக சொல்கிறேன் அதை சொல்வதில் பெருமைப்படுகிறேன்.
நானும் ஒரு கிறிஸ்தவன் தான். நீங்கள் என்னை கிறிஸ்டியன் என்று நினைத்தால் கிறிஸ்டியன், நீங்கள் என்னை முஸ்லிம் என்று நினைத்தால் நான் முஸ்லிம், நீங்கள் என்று இந்து என்று நினைத்தாலும் இந்து தான். ஏனென்றால் நான் எல்லோருக்கும் பொதுவானவன் எப்போதும் அப்படித்தான் இருப்பேன்.
எல்லா மதங்களுக்கும் அடிப்படையே அன்புதான். எல்லார் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதைத்தான் எல்லா மதங்களும் சொல்லித் தருகின்றன. ஆனால், அதே மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்கள்தான் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவார்கள்” என்று கூறுகிறார்.
தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து தேடுகையில் இது கோவையில் சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ எஸ்.பி.சி பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில் டிசம்பர் 18 நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா என்பதும் அதில், உதயநிதி ஸ்டாலின் பேசியதும் தெரியவந்தது. இதுகுறித்த பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
SPC பெந்தெகோஸ்தே சபைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கோவையில் இன்று கலந்து கொண்டோம். இச்சிறப்புக்குரிய நிகழ்வில், நலத்திட்ட உதவிகளை வழங்கி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தோம். சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக தி.மு.கழகமும், நம்… pic.twitter.com/QgShyd8059
— Udhay (@Udhaystalin) December 18, 2024
இறுதியில், தேடலின் முடிவில், "நானும் ஒரு கிறிஸ்தவன் தான். நீங்கள் என்னை கிறிஸ்டியன் என்று நினைத்தால் கிறிஸ்டியன், நீங்கள் என்னை முஸ்லிம் என்று நினைத்தால் நான் முஸ்லிம், நீங்கள் என்று இந்து என்று நினைத்தாலும் இந்து தான். ஏனென்றால் நான் எல்லோருக்கும் பொதுவானவன்" என்று மத நல்லிணக்க உணர்வோடு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கிறிஸ்தவத்திற்கு மட்டும் கூறியது போன்று தவறாக திரித்து பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/tamilnadu-deputy-cm-udayanidhi-stalin-feels-proud-of-being-christian-740905?infinitescroll=1
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.