தமிழகத்தின் சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் மழைநீர் கரை புரண்டு பெருக்கெடுத்து ஓடியதாகவும், இதனால், வாகனங்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து பேக்ட்லி இணைய பக்கம் இணைய பக்கம் சரிபார்த்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு பேக்ட்லி (factly.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
வங்கக்கடலில் 25 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 29 ஆம் தேதி புயலாக மாறியது. ஃபீஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த சனிக்கிழமை இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இந்தப் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதேபோல், அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில், தமிழகத்தின் சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் மழைநீர் கரை புரண்டு பெருக்கெடுத்து ஓடியதாகவும், இதனால், வாகனங்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து பேக்ட்லி இணைய பக்கம் ஆய்வு செய்துள்ளது.
இதனை சரிபார்க்க, கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடப்பட்டுள்ளது. அப்போது, 3 செப்டம்பர் 2024 அன்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் கேப்சனில் "ஜெட்டா நகரில் கனமழை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு தேடலின் முடிவில், அதே வீடியோ yahyafarsi1430 என்ற கணக்கின் மூலம் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் "செப்டம்பர் 2 அன்று ஜெட்டா நகரில் கனமழை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யூடியூப் வீடியோவில் இருந்து முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி மேலும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், ஜெட்டாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை விவரிக்கும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. "செப்டம்பர் 2, 2024 அன்று, ஜெட்டாவில் கனமழை பெய்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சாலைகள் நீரில் மூழ்கின, பள்ளிகள் மூடப்பட்டன, பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வழிகளைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த வெள்ளத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழநதுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவுக்கும், சென்னை மெரினா கடற்கரையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதாககுறிப்பிடுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து வெள்ளம் சூழ்ந்த சாலைகளின் காட்சிகள், தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து வந்ததாகப் பகிரப்பட்டு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 25, 2024 அன்று தொடங்கிய ஃபீஞ்சல் புயல் காரணமாக சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டது. ஆனால், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதியன்று, சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் கனமழை பெய்த போது எடுக்கப்பட்ட வீடியோவை அதனுடன் இணைத்து தவறான தகவல் சமூக வலைதளத்தில் பரப்படுவதாகவும் பேக்ட்லி இணைய பக்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த தவறான தகவலை யாரும் பகிர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த உண்மைச் சரிபார்ப்பு பேக்ட்லி (factly.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://factly.in/visuals-of-flooded-roads-from-saudi-arabia-shared-as-being-from-tamil-nadu/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.