மைதானத்தில் யுவராஜ் சிங் இறங்கினால் பந்து வீச்சாளர்களை கண்களாலே மிரட்டுவார். அவருக்கு பந்து வீசும் போது எங்ளுக்கே தெரியாமல் ஒருவிதமான பயம் வரும் என்று பிரபல சுழல் பந்து வீச்சாளர்கள் கூட ஒரு முறை கூறியிருக்கின்றனர். இப்படி ஆல் ரவுண்டராக கலக்கி வந்த யுவராஜ் சிங் கடந்த 2011 ஆம் ஆண்டு, புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
அவருடைய போராட்ட குணம் தான் அவரை புற்று நோயில் இருந்து மீட்டு கொண்டு வந்தது. சிகிச்சைக்கு பிறகு மறுவாழ்வு பெற்றார். அதன் பின்பு, கிரிக்கெட் அணியில் மீண்டும் விளையாட யோ யோக பயிற்சியில் ஜெயித்து ”நான் திரும்பி வந்துட்டேன் டா” என்று உரத்த குரலில் கர்ஜித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
தற்போது, ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார். இந்தூரில் சமீபத்தில் நடந்த ஐபில் போட்டியில் யுவராஜ் சிங் 11 வயது சிறுவனை சந்தித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதன் பின்பு, பஞ்சாப் அணியில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுக் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
11 year old Rocky, who's suffering from cancer met with his idol @YUVSTRONG12 who spent some time with the young champ.
Here's wishing him a speedy recovery.#LivePunjabiPlayPunjabi #KXIP #VIVOIPL #KingsXIPunjab pic.twitter.com/bZejC0daDr
— Kings XI Punjab (@lionsdenkxip) May 10, 2018
ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த 11 வயது சிறுவன், யுவராஜ் சிங்கின் தீவிர ரசிகனாம். இன்னும் சில நாட்களில் அவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ள நிலையில் யுவராஜ் சிங்கை நேரில் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளான். அதன்படி அந்த சிறுவனை நேரில் அழைத்து பேசிய யுவராஜ் சிங் அவனிடம் ”நானும் உன்னைப் போல் தான் இப்போது மீண்டு வந்துள்ளேன். நீயும் வருவாய். தைரியமாக இரு” என்று கூறி பஞ்சாப் அணியின் ஜெர்சி, தொப்பி போன்றவற்றை பரிசாக அளித்து, உடல்நலம் தேறி வருவதற்காக வாழ்த்தையும் கூறி யுவராஜ் அனுப்பியுள்ளார்.
யுவராஜின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.