துத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காவலர் சீருடையில் போலீசாரை வன்மையாக விமர்சித்த நடிகை நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தென்றல் சீரியல் மூலம் சின்னதிரையில் காலடி பதித்த இவர், தற்போது தாமரை சீரியலில் காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆணவக் கொலை பற்றிய ‘சிவகாமி’ என்னும் தொடரில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/nilani-1-300x300.jpg)
நடிகை நிலானி, திரையுலகம் மட்டுமின்றி சமூக பிரச்சனைகளிலும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த காவிரி போராட்டம், ஐபிஎல் தடை கோரிய போராட்டம் உட்பட பல சமூக ரீதியான பிரச்சனைகளில் தனது வாதத்தைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதே போல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து தனது முகநூலில் லைவ் வீடியோ பதிவு செய்தார். படப்பிடிப்பின் நடுவே காக்கி உடையில் ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இந்தப் பதிவில், “காக்கி சட்டை அணியவே கேவலமாக இருக்கிறது. அப்பாவி மக்களைக் கொன்றிருக்கிறார்கள். தமிழ் மக்களைத் தீவிரவாதிகளாக மாற்ற இந்த அரசும் போலீசாரும் முயற்சி செய்கின்றனர். இலங்கையில் என்ன நடந்ததோ அது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இன்னொரு பாலசந்திரனையும், இசைப்பிரியாவையும் இழக்க வேண்டாம்'' எனக் கூறியுள்ளார்.
https://www.facebook.com/nilani.nilani.925/videos/767793486942787/
காவலர் சீருடையை அணிந்து கொண்டு போலீசாரை வன்மையாகச் சாடியும் கண்டித்தும் பேசிய இவர் மீது ரிஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் நடிகை நிலானி மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.