சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், ஆராய்ச்சிக்காக நடுக்கடலில் போடப்பட்டிருந்த மிதவை கூண்டு மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே கரை ஒதுங்கியது. இந்த மிதவை கூண்டு மீது இளைஞர்கள் ஏறி விளையாடி புகைப்படம் எடுத்த நிலையில் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபீஞ்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வரும் நிலையில், சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ளகடற்கரை பகுதியில் மிதவைக் கூண்டு கரை ஒதுங்கியது. கடலில் போடப்பட்டிருந்த மிதவை கூண்டு, கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இது தற்போது செயல்பாட்டில் இருப்பதா அல்லது பழுதடைந்ததா என கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பொது மக்கள் ஆபத்தான முறையில் அதன் மேல் ஏறி புகைப்படம் எடுத்து வருவதால், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த மிதவைக் கூண்டு குறித்து மெரினா கடற்கரை போலீசார், இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வங்கக் கடலில் உருவாகும் ஃபீஞ்சல் புயல் சென்னை - பரங்கிப்பேட்டை இடையே கரையைக் கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். நவம்பர் 30-ம் தேதி புயல் கரையைக் கடக்கும் என்பதால் வரும் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் சென்னையில் மிக அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“