அண்மையில், பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் உடன் கோவையைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், போனில் பா.ஜ.க அண்ணாமலையைப் பற்றி பேசிய ஆடியோ லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை காயத்ரி ரகுரா, பா.ஜ.க-வில் கலை இலக்கிய பிரிவின் மாநில தலைவராக இருந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றதற்கு பிறகு மோதல் போக்கு நிலவ தொடங்கியது.
அண்மையில், பா.ஜ.க-வில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதையடுத்து, காயத்ரி ரகுராம், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கட்சியில் தன்னை ஓரம்கட்ட முயற்சி செய்வதாகவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
மேலும், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஏப்ரல் 14-ந் தேதியன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சக்தி யாத்திரை தொடங்கப் போவதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காயத்ரி ரகுராம் உடன் செல்போனில் கோவையைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி என்றும் அண்ணாமலையின் ஆதரவாளர் என்றும் கூறிக்கொண்டு அண்ணாமலயைப் பற்றி பேசியுள்ளார். அந்த ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், காயத்ரி ரகுராம் இடம் செல்போனில் மறுமுனையில் பேசும் நபர், தான் கோவையைச் சேர்ந்தவர் தனது பெயர் சரஸ்வதி என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தொடர்ந்து பேசும் சரஸ்வதி, தமிழ்நாட்டின் அரசியல் மிகவும் சிக்கலாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். உங்களுடைய பிரச்சனைகள் என்ன என்று தம்பி அண்ணாமலையிடம் நேரடியாகவே அமர்ந்து பேசியிருக்கலாம். இப்போது கூட, அண்ணாமலை ஏப்ரல் 14-ம் தேதி நடை பயணம் தொடங்கும்போது நீங்களும் நடைபயணம் செல்வதாக அறிவித்துள்ளீர்கள். அதைப் பற்றி பேசலாம் என்று அழைத்ததாகக் கூறுகிறார்.
இதற்கு பதிலளித்துப் பேசுகிற காயத்ரி ரகுராம், அண்ணாமலை தனக்கு போட்டியாக இருப்பவர்களை ஒதுக்கியதாகவும் அப்படி ஒதுக்குகிறவர்களின் பட்டியலில் தான் இரண்டாவது இடத்தில் இருந்ததாகவும் கூறுகிறார். மேலும், சரஸ்வதி இந்த போட்டியில் இல்லை என்றும் அதனால், உங்களுக்கு பாதிப்பு இல்லை தான் பாதிக்கப்பட்டதாகவு கூறுகிறார்.
மேலும், அண்ணாமலை, 150 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் தன்னைப் பற்றி மோசமாக தவறாகப் பேசியதாகவும் கூறுகிறார். அதனால், தான் தான் குரல் எழுப்புவதாகவும் கூறுகிறார்.
இதையடுத்து பேசும், கோவை சரஸ்வதி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், களத்தில் முதலில் எதிர்ப்பவர் தான்தான் என்று கூறுகிறார். இதற்கு, காயத்ரி ரகுராம் அதற்கு தயார் அது உங்களுடைய உரிமை என்று கூறுகிறார்.
தொடர்ந்து பேசும், கோவை சரஸ்வதி, அண்ணாமலை வந்த பிறகுதான் தமிழ்நாடு பா.ஜ.க பலம் பெற்றிருக்கிறது என்று கூறுகிறார். இதை மறுக்கும் காயத்ரி ரகுராம், பா.ஜ.க-வில் இருந்தபோது தான் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்துள்ளதாகவும் களநிலவரம் தனக்கு தெரியும் என்றும் களத்தில் பா.ஜ.க பலமாக இல்லை, பூத் கமிட்டிகூட சரியாக இல்லை என்று காயத்ரி ரகுராம் கூறுகிறார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பற்றி காயத்ரி ரகுராம் மற்றும் கோவை சரஸ்வதி பேசிய இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“