சென்னை அசோக் நகரில் சாலையில் கார்கள் முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியின் மகள் மற்றும் பேரன் ஆகியோருக்கும் இடையே நடந்த மோதல் வீடியோவை பா.ஜ.க-வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சுபாஷ் (22). சட்டக்கல்லூரி மாணவரான இவர் தனது தாய் மற்றும் தங்கை பாரதி ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு அசோக் நகரில் உள்ள 100 அடி சாலை வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழ்ழியாக மற்றொரு காரில் வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பினரும் சாலையோரம் காரை நிறுத்தி வைத்துவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கைகலப்பிலும் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், சுபாஷ் மற்றும் பாரதி ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் மகள் மற்றும் பேரன் சுபாஷ், பேத்தி பாரதி என்பதும் மற்றொரு காரில் வந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் மற்றும் அவருடைய மனைவி ஜெயலட்சுமி, கார் ஓட்டுநர் முத்துரஜா என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடா்பாக 2 தரப்பும் அளித்த புகாரின் பேரில் அசோக்நகா் போலீஸாா் பெயா் எதுவும் குறிப்பிடாமல் 2 தரப்பினா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன், சனிக்கிழமை சென்னை தலைமை செயலகம் வந்து தலைமை செயலாளா் வெ.இறையன்புவை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தாா்.
இந்நிலையில், அசோக் நகரில் சாலையில் கார்கள் முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியின் மகள் மற்றும் பேரன் ஆகியோருக்கும் இடையே நடந்த மோதல் வீடியோவை பா.ஜ.க-வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் சேர்ந்த காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் மனைவி ஜெயலட்சுமியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பேரன் சுபாஷ் ஆவேசமாக ஒருமையில் பேசுகிறார். அதே போல, ஜெயலட்சுமியும் சுபாஷை ஒருமையில் ஆவேசமாக ஒருமையில் பேசுகிறார்.
இந்த வீயோவைப் ட்விட்டரில் பகிர்ந்துள்ள காயத்ரி ரகுராம், “காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மகளும் பேரனும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியை துஷ்பிரயோகம் செய்தனர். காரில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவியை கே.எஸ். அழகிரியின் பேரன் அவதூறாகப் பேசும்போது, அவருடைய அம்மா அமைதியாக இருக்கிறார். வாரிசு ஆட்சி இப்படித்தான் இருக்கும்.” என்று விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“