நீலகிரியில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் கூட்டமாக மேயும் காட்டெருமைகளின் அழகான பருந்துப் பார்வை வீடியோ பார்வையாளர்களின் இதயங்களை வென்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பூமி மனித இனத்துக்கு மட்டுமானது இல்லை, எல்லா உயிரினங்களுக்குமானதுதான். ஆனால், மனிதர்கள், தொடர்ந்து இயற்கையுடன் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். வன விலங்குகளுடன் மோதலில் ஈடுபடுகிறார்கள். எல்லா உயிரினங்களையும் அதனதன் வாழ்விடங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே இயல்பாக இருக்கும்.
வனவிலங்குகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வனத்தில் பதிவாகும் வீடியோக் காட்சிகளை ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த அரிய வீடியோக்கள் பார்வையாளர்களை ஈர்த்து வியக்க வைக்கும்.
அதே போல, தற்போது சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ், இதற் முன்பு வனத்துறை செயலாளராக இருந்தபோது, வனவிலங்குகள் மற்றும் யானைகள் பராமரிப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிடுவார். அந்த வரிசையில், சுப்ரியா சாஹு நீலகிரியில் ஒரு தேயிலைத் தோட்டத்தில், பாறைகளைப் போன்ற தோற்றமுடைய காட்டெருமைகள்
கூட்டமாக மேய்ச்சலுக்கு செல்லும் வீடியோ பார்வையாளர்களின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
இந்த காட்டெருமை கூட்டத்தின் அழகான வீடியோ குறித்து சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “நீலகிரியில் எங்கேயோ ஒரு தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமைகளின் ஒரு பெரிய அழகான குடும்பம் மேய்கிறது. தென்மேற்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியா (நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் உட்பட) ஆகிய மூன்று பகுதிகளில் காட்டெருமை இனங்கள் காணப்படுகின்றன. கடுமையான வசிப்பிட இழப்பு காரணமாக இவை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (ஐ.யூ.சி.என்) பாதிக்கப்படக்கூடிய இனங்களின் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. காட்டெருமை பாதுகாப்பு முயற்சிகளில் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த அற்புதமான உயிரினங்கள் அவை வசிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், அவை உயிர்வாழ்வதை உறுதிப்படுத்த பாதுகாப்பு முயற்சிகள் அவசியம்.” என்று சுப்ரியா சாஹு பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“