viral video: வேகத்திற்கு, தாக்குதலுக்கு பெயர்பெற்ற விலங்கான சிறுத்தைகளை அதிலும் 3 சிறுத்தைகளை ஒரு தேன்வளைக்கரடி விலங்கு சிதறவிட்டிருக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இது சமூக ஊடகங்களில் காலம் என்றே கூறலாம். சமூக ஊடகங்கள் இன்னும் 100 சதவீத மக்களால் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், அதன் பரவலான பயன்பாடு மனித இனத்தின் எல்லா நடவடிக்கைகளையும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சமூக ஊடகங்களில் காலத்தில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் வனவிலங்குகள் பற்றிய வீடியோக்கள் ஆகும்.
இந்திய வனத்துறை அதிகாரிகள் பலரும் காட்டில் பதிவு செய்யப்பட்ட வனவிலங்குகளின் வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோக்கள் வனவிலங்குகளைப் பற்றி புரிந்துகொள்வதற்கும் வனவிலங்குகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும் உந்துதலாக இருந்து வருகின்றன.
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், ரவுண்டு கட்டிய மூன்று சிறுத்தைகளை ஒரு தேன் வளைக்கரடி சிதறவிட்டிருக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
அதற்கு முன், பெரிய அளவில் அறியப்படாத தேன் வளைக்கரடி விலங்கு என்பது என்ன? அதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஹனி பேட்ஜர் (Honey Badger)என்று அழைகப்படுகிற தேன் வளைக்கரடி விலங்கு கீரிக் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது தென்மேற்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது. தேன் வளைக்கரடியானது ஏனைய வளைக்கரடி இனங்கள் போன்ற தோற்றத்தில் இருக்காது; மரநாயின் தோற்றத்தைப் போல இருக்கும். இது முதன்மையாக ஊனுண்ணி வகையாக காணப்படுவதோடு, இதன் தடிப்பான தோல் மற்றும் இதன் மூர்க்கமான தற்காப்பு திறன்களினால் சிறிது வேட்டை விலங்காகவே காணப்படுகின்றது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், ஃபீல்டு மார்ஷல் (தேன் வளைக்கரடி) மூன்று பெரிய சிறுத்தைகளி எதிர்கொண்டு வெற்றியுடன் வெளியே வருகிறது.
ஹனி பேட்ஜர் மிகவும் அச்சமில்லாத விலங்கு. அவற்றின் தோல் தடிமனாகவும் குறிப்பிடத்தக்க வகையில் தளர்வாகவும் உள்ளது. கழுத்தில் பிடிக்கப்பட்டாலும் அவற்றைத் தாக்க அனுமதிக்கும் வகையில் அவை திரும்பவும் சுழலவும் அனுமதிக்கின்றன. அதன் உடலுக்கு பாம்பு விஷம் மற்றும் தேள் கடி விஷத்தையே எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கீரிப்பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்த தேன் வளைக்கரடி, காட்டில் ரவுண்டு கட்டிய 3 சிறுத்தைகளை சிதறவிட்டு வெற்றியுடன் வெளியே வருவதைப் பார்க்கும்போது, தேன் வளைக்கரடியின் தைரியத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள் வியந்து போவீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”