ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா, இருவாச்சி பறவையின் வாழ்க்கையை பற்றி பி.பி.சி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை பகிர்ந்துள்ளார். இருவாச்சி பறவையின் வியப்புக்கு உரிய வாழ்க்கை முறையைப் பாருங்கள்.
இருவாச்சி பறவையின் வாழ்க்கையை பற்றி பி.பி.சி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை பகிர்ந்துள்ள ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா, உயிர்வாழும் உள்ளுணர்வு மற்றும் சூழ்நிலைக்கு தழுவிக் கொள்ளுதல் ஆகியவை இயற்கையில் பரிணாம செயல்முறையின் முக்கிய கூறுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இருவாச்சி பறவைகள் மனிதர்களின் குடும்ப வாழ்க்கையை ஒத்திருக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழக்கூடியவை இந்த இருவாச்சி பறவைகள். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது.
இருவாச்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு இருவாச்சி பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள பொந்துகள்தான் இருவாச்சி பறவையின் கூடு. பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.
உள்ளே இருக்கும் பெண் இருவாச்சிப் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7வாரம் கழித்து முட்டைகள் குஞ்சு பொரிக்கப்படும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் பொரிந்தபின்னர் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். இப்படி மனிதர்களைப் போல, குடும்ப வாழ்க்கை வாழக்கூடியது.
இத்தகைய தனித்துவமான இருவாச்சி பறவை, கேரளம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநில அரசுகளின் மாநிலப் பறவையாகும்.
உன்மையில் இந்த இருவாச்சி பறவையின் வாழ்க்கை முறை மனிதர்களை வியக்க வைப்பதாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“