ராஜாவுக்கு என்ன ஆச்சி.. வீடியோ வெளியிட்டு பாடகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இளையராஜா!

அந்த பணத்தில் எனக்கு பங்கு இல்லையா?

பிரபல இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜா வீடியோ:

ராஜா.. இந்த பெயரை கேட்டாலே  பலருக்கும் ஞாபகம் வருவது இளையராஜா தான்.  தூங்காத எத்தனையோ இதயங்களை தூங்க வைப்பது அவரின் பாடல்கள் தான்.

காதல், நட்பு, பிரிவு,கோபம், சண்டை, அழுகை என மனிதனின் ஒவ்வொரு உணர்வையும் இசையாலே புரிய வைத்தவர் தான் இசைஞானி இளையராஜா. தலைமுறைகளை தாண்டி நிற்கும், ராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை.

இந்நிலையில்,  இன்றைய தினம் ராஜா  தானே பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “எனது பாடல்களை பாடுவதற்கு முன்பு, என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய விஷயங்கள் அனைத்தையும் முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும்.

இல்லையென்றால் சட்டப்படி குற்றமாகும். என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுகிறவர்களோ, இசை குழுவில் வாசிக்கிறவர்களோ அப்படிச் செய்வது தவறு என்பதை நீங்கள் உணர வேண்டும். அதை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை ஐ.பி.ஆர்.எஸ்-யில் நான் உறுப்பினராக இருந்தேன். நான் இப்போது ஐ.பி.ஆர்.எஸ்-யில் உறுப்பினராக இல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்து கொண்டிருந்த ராயல்டி தொகையை நமது தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு அந்த உரிமையை நான் வழங்கியிருக்கிறேன்.

ஐ.பி.ஆர்.எஸ்-க்கு பதிலாக நமது இசைக் கலைஞர்கள் சங்கம் இந்த ராயல்டி தொகையை வசூல் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். பாடகர்களும், பாடகிகளும் இதில் உள் அடங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையே தவிர, நீங்கள் பாடுகின்ற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை. நீங்கள் பாடுவது இலவசமாக பாடினால், இலவசமாக பாடிவிடலாம், பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

இதை சரியாக புரிந்துகொள்ளுங்கள். சின்ன விஷயம். பணம் வாங்குகிறீர்கள் அல்லவா? சும்மாவா கச்சேரி பண்றீங்க? என் பாட்டை தான பாடுகிறீர்கள். என் பாட்டுக்கு நீங்க பணம் வாங்குறீர்கள், அந்த பணத்தில் எனக்கு பங்கு இல்லையா? பாட்டே என்னுடையது என்றபோது பங்கு எப்படி இல்லாமல் போகும். பங்கு என்ன ஒரு சின்ன தொகை.

சட்டப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தான் கேட்கிறோம். நாளைக்கு வருகின்ற தலைமுறைக்கு இது ஒரு பெரிய நடவடிக்கையாகவும், முன்னோட்டமாகவும் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்” என்று  தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ மூலம் இளையராஜா பகிர்ந்துள்ள கருத்து பாடகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயத்தில் அவர் கேட்பதில் நியாம் இருக்கிறது தான் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் தனது பாடல்களை மேடையில்  எஸ்பி பாடியதற்கு பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்த ராஜா தற்போது ஒட்டுமொத்த திரைத்துறையினருக்கும் சேர்த்து இந்த வீடியோவை வெளியிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close