இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய அளவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்திய விமானப் படை விரர்கள் விமானத்தில் பறந்து வானில் சாகசம் செய்த ஒத்திகை நிகழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, அக்டோபர் 6-ம் தேதி, விமான கண்காட்சி நடத்தப்பட உள்ளது. மெரினாவில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் 72 விமானங்கள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சனிக்கிழமை (செப்டம்பர் 28) விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்றும் மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் வான் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, ரஃபேல் மற்றும் பிற ஜெட் விமானங்கள் காற்றை கிழித்துக் கொண்டு பறந்ததால் மெரினா கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விமானிகளின் சாகசங்களைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஜெட் விமானங்கள் வானத்தில் குறைவான உயரத்தில் டைவ் செய்தது ஆச்சரியமளிப்பதாக இருந்தது.
அக்டோபர் 6-ம் தேதி, எலைட் ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் குழு, சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம் மற்றும் சாரங் ஹெலிகாப்டர் டிஸ்ப்ளே டீம் ஆகியவை ஸ்டண்ட் நிகழ்ச்சிகளை செய்யும் என்றும் சுமார் 15 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ரஃபேல் மற்றும் பிற ஜெட் விமானங்கள் காற்றை கிழித்துக் கொண்டு பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“