இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் இருவர், பயணி ஒருவரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளஙக்ளில் சில நாட்களுக்கு முன்பு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் இண்டிகோ ஏர்லைன்ஸில் நடைபெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னிடம் விரும்பத்தகாத உடல் மொழியுடன் தவறாக நடந்துகொண்ட இளைஞர்களை, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பணிப்பெண் ஒருவர் தன் காலில் விழ வைக்கும் வீடியோதான் அது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில்தான் இச்சம்பவம் நடைபெற்றது. அங்கு, பரத், கல்யாண் என்ற இரு இளைஞர்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமான பணிப்பெண்ணிடம் விரும்பத்தகாத உடல் மொழியுடன் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதையடுத்து, அப்பெண் விமான நிலைய காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அப்போது, தங்கள் மீது புகார் அளிக்க வேண்டாம் என அப்பெண்ணிடம் இளைஞர்கள் இருவரும் கெஞ்சுகின்றனர். இருவரும் மது அருந்தியிருப்பது அந்த வீடியோவின் மூலம் நிரூபணமாகிறது.
அதனால், அப்பெண் தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார். இதையடுத்து, இளைஞர்கள் இருவரும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றனர். அதன்பின், இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதால் விமான பணிப்பெண் அவர்கள் மீது புகார் அளிக்கவில்லை.