இன்றைய இளைஞர்களின் கனவு, ஐஐடி அல்லது எம்பிஏ பட்டம் பெற்று லட்சங்களில் சம்பாதிப்பது. ஆனால், ஒரு மென்பொருள் பொறியாளர் எந்தப் பட்டமும் இல்லாமல், வெறும் இரண்டு வேலை மாற்றங்களில், தனது சம்பளத்தை ரூ.26 லட்சத்திலிருந்து ரூ.70 லட்சமாக உயர்த்தி, ஒட்டுமொத்த இணைய உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
மென்பொருள் பொறியாளரான சௌரப் யாதவ், எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “முதல் வேலை: ரூ.26 லட்சம், இரண்டாவது: ரூ.28 லட்சம், மூன்றாவது: ரூ.70 லட்சம். ஐ.ஐ.டி-யில் படிக்கவில்லை, எம்.பி.ஏ பட்டம் பெறவில்லை. கடினமாக உழைத்தேன், அவ்வளவுதான்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவுக்கு பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களும், ஆர்வலர்களும் எதிர்வினையாற்றினர். ஒருவர், “முதல் வேலையிலிருந்து இரண்டாவது வேலைக்கு 7.7% சம்பள உயர்வுக்காக மாறினீர்களா? இரண்டாவது வேலையில் எவ்வளவு காலம் வேலை செய்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த யாதவ், “அது ஒரு நீண்ட கதை. எனக்கு வேறு வழியில்லை. நான் முதலில் ராஜினாமா செய்தேன், பின்னர் ஒரு மோசடி நிறுவனத்தில் சேர்ந்தேன், பிறகு அங்கிருந்து வெளியேறி வேறு இடத்தில் சேர வேண்டியிருந்தது” என்று எழுதினார்.
இந்த சில வார்த்தைகள், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளுக்குப் புது அர்த்தம் கொடுப்பதற்கு போதுமானதாக இருந்தது. நாட்டின் உயர்ந்த நிறுவனங்களில் படிப்பது மட்டுமே முக்கியம் இல்லை, திறமையும் உழைப்பும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த பதிவு விதைத்துள்ளது.
சௌரபின் இந்த வைரல் பதிவைக் கண்ட எக்ஸ் பயனர்கள், ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் பல கேள்விகளை எழுப்பினர். “நீங்கள் எந்தத் துறையில் வேலை செய்கிறீர்கள்? எப்படி இந்த சம்பள உயர்வு சாத்தியமானது? என்ன மாதிரியான திறமைகள் இதற்கு உதவின?” என்று பலரும் கேட்டனர். அவர் ஐ.ஐ.டி போன்ற பெரிய நிறுவனங்களில் படிக்காமல், தனிப்பட்ட திறமையால் இவ்வளவு பெரிய சம்பளத்தை எட்டியது பலருக்கு உந்துதலாக அமைந்தது.
இந்த சாதனைப் பயணத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, ஐ.ஐ.டி, எம்.பி.ஏ பின்னணி இல்லாத இளைஞர்கள், இது தங்களுக்கு நம்பிக்கையளிப்பதாகக் கூறினர். சிலர் வேடிக்கையாகவும் கருத்து தெரிவித்தனர். ஒரு பயனர், “என் முதல் சம்பளமே ரூ.1.8 லட்சம்தான். இதை முறியடிக்க முடியுமா?” என்று கிண்டலாகக் கேட்டார். மற்றொருவர், “என் தற்போதைய சம்பளம் ஒரு கோடி. இது எனக்கு ஒரு சாதாரண விஷயம் தான்” என்று நகைச்சுவையாகப் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு பயனர்,“முதல் வேலை மிதிவண்டி, இரண்டாவது வேலை ரிக்ஷா, மூன்றாவது வேலை ஆட்டோ. குறைவாக உழைத்தால் போதும்" என்று கிண்டலாகக் கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "இந்த பதிவு எனக்கு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது" என்று கூறினார்.
இன்னொரு இணையவாசி தனது விரக்தியைப் பகிர்ந்து கொண்டார்: “ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் முயற்சிக்கும்போது, அது தோல்வியில் முடிகிறது. ஒவ்வொரு முறையும் நான் மேசையிலும் நாற்காலியிலும் அமரும்போது, எனது முயற்சிகள் அதிகரிக்கின்றன. ஆனால் அதே விளைவுதான் மீண்டும் மீண்டும் வருகிறது. முடிந்தால், இப்போதே எனக்கு வழிகாட்டவும், என்ன செய்வது, என்ன செய்யக்கூடாது என்பதில் மிகவும் குழப்பமாக இருக்கிறேன்."
இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த பதிவு, பட்டம் மட்டும் வெற்றிக்கான வழி அல்ல, கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் போதும், எந்த உயரத்தையும் தொடலாம் என்பதை உணர்த்துகிறது.