அசாம் மாநிலம் ககோய்ஜனா வனக்காப்பகப் பகுதியில் உள்ள தங்க நிற லங்கூர் இனக் குரங்குகள் சாலையைக் கடப்பதற்காக பரிசோதனை முயற்சியில் அமைக்கப்பட்ட தொங்கு பாலத்தை பயன்படுத்தி லங்கூர் குரங்குகள் சாலையைக் கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பொங்கைகான் மாவட்டத்தில் அபயபுரிக்கு அருகில் ககோய்ஜனா வனக்காப்பகம் அமைந்துள்ளது. இந்த காடு தங்க நிற லங்கூர் குரங்குகளுக்கு பிரபலமானது. இந்த அழிந்து வரும் லங்கூர் குரங்குகள் அடிக்கடி சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. அதனால், இந்த தங்க நிற லங்கூர் குரங்குகள் பாதுகாப்பாக சாலையைக் கடப்பதற்கு, வனத்துறை ஒரு பரிசோதனை முயற்சியாக ஒரு தொங்கு பாலம் அமைத்தது. இதை தங்க நிற லங்கூர் குரங்குகள் எப்படிப் பயன்படுத்தப்போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அதிசயம் காத்திருந்தது. ஆம், தங்க நிற லங்கூர் குரங்குகள் ரொம்ப அருமையாக இந்த தொங்கு பாலத்தைப் பயன்படுத்தி சாலையைக் கடக்கின்றன.
இந்த வீடியோவை நந்தன் பிரதிம் சர்மா பர்டோலாய் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். “அசாம், கஜோய்ஜனாவில், அசாம் தங்க லங்கூர்கள் நெடுஞ்சாலையின் மீது முதல் சோதனை தொங்கு பாலத்தைக் கடந்தன.
இந்த அழிந்து வரும் லங்கூர்கள், பெரும்பாலும் மின்சாரம் தாக்கியோ அல்லது வேகமாகச் செல்லும் வாகனங்களால் தாக்கப்பட்டோ அதிக அளவில் உயிரிழந்தன. ஆனால்,, இப்போது தங்கள் பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட பாலத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பாகக் கடக்கின்றன.
இந்த அரிய அசாம் தங்க நிற லங்கூர் குரங்கு இனங்கள் இந்த தொங்கு பாலத்தை திறம்படப் பயன்படுத்துகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கஜோய்ஜனாவில் தங்க நிற லங்கூர் குரங்குகள் தொங்கு பாலத்தைப் பயன்படுத்தி சாலையைக் கடக்கும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.