குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும், ரூ.1,000 வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் தொகை வரவு வைக்கப்படாதவர்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய பிரத்யேக இணையதளத்திலும் உதவி மையங்களுக்கு நேரில் சென்றும் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15-ந் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உடைய பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்த சிலரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது. இதை சரி செய்து, அவர்களின் வங்கி கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அஞ்சலக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மனியார்டர் மூலமாக தொகை அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும், மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட பயனாளிகள், அந்த தொகையை எடுக்கும் வரை அவர்களின் வங்கி கணக்கிலேயே தொடர்ந்து இருக்கும். பயனாளிகள் விரும்பும் வரை அந்த தொகையை வங்கி கணக்கில் வைத்திருக்கலாம்.
மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகிய காரணங்களுக்காக திட்ட ஒப்பந்தத்திற்கு முரணாக சில வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் முதல்வரின் முகவரி உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1100-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த சிலருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி தொடர்புடைய விண்ணப்பதாரர்களின் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு இன்று (செப்டம்பர் 19) முதல் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் தாங்கள் தேர்வு செய்யப்பட வில்லை என கருதினால், மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் ஏற்கவில்லை என்ற குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல் முறையீடு செய்ய வேண்டும். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த மேல்முறையீடு விண்ணப்பங்களை மேல்முறையீடு அலுவலரான வருவாய் கோட்டாட்சியரால் மேல்முறையீடுகள் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய தமிழ்நாடு அரசால், https://kmut.tn.gov.in என்ற இணையதளம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்துகொள்ளலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன் 1100 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்துகொள்ளலாம்.
இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள உதவி மையங்களுக்கு நேரிலும் சென்று தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்துகொள்ளலாம்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளியாக அனுமதிக்கப்பட்ட மகளிர் தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு ஆகியன ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான வசதியும் விரைவில் ஏற்படுத்தி அளிக்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் தகுதியான ஒரு மகளிர் கூட விடுபடக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உறுதியாகத் தெரிவித்து உள்ளது.
அதே போல, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பம் அளிக்காதவர்கள் விண்ணப்பங்கள் அளிக்க விரைவில் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.