வெங்காயத்தை கமல் கூப்பிடுகிறார்… கலாய்க்கும் நெட்டிசன்கள்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெங்காய விலை உயர்வு பற்றி பதிவிட்ட ஒரு ட்வீட்டை நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கிண்டல் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் வெங்காயத்தைப் பற்றி அப்படி என்ன ட்வீட் செய்தார்?

By: Updated: October 23, 2020, 09:54:54 PM

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெங்காய விலை உயர்வு பற்றி விமர்சித்து பதிவிட்ட ஒரு ட்வீட்டை நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கிண்டல் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் வெங்காயத்தைப் பற்றி அப்படி என்ன ட்வீட் செய்தார்?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அரசியல் நிகழ்வுகளுக்கு அருக்கே உரிய மொழியில் ட்விட்டரில் எதிர்வினையாற்றுவார். சமூக ஊடகங்களில் அப்படி எதிர்வினையாற்றுவது தனது ஸ்டைலாகக் கொண்டுள்ளார். கமல்ஹாசனின் கருத்துகள் பெரும்பாலும் புரிந்தும் புரியாமலும் இருப்பதாக விமர்சனங்கள் உண்டு.

இந்த நிலையில், இந்தியாவில் வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்தது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.135-க்கு மேல் விற்பனையானது. வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் வெங்காயம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

வெங்காய விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வெங்காயம் விலை உயர்வை விமர்சித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். பொதுவாக கமல்ஹாசனின் ட்வீட்களை சரியாக புரியவில்லை என்று புகார் கூறி வந்த நெட்டிசன்கள் இந்த முறை கமல்ஹாசனை ஏகத்துக்கும் கிண்டல் செய்து வருகின்றனர்.

வெங்காய விலை உயர்வு பற்றி, கமல்ஹாசன் அப்படி என்ன ட்வீட் செய்திருந்தார் என்றால், “பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார். விலையிறங்குவாயா வெங்காயமே?” என்று ட்வீட் செய்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த ட்வீட்டைப் பார்த்த நெட்டிசன்கள், “ஏய்… வெங்காயம் உன்னத்தான் கமல் கூப்பிடுறார் பார்…” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

மற்றொரு ட்விட்டர் பயனர், “தமிழ் புலவரே.. இவர் என்ன கூற வருகிறார் என்று எமக்கு புரிய வைத்து உதவவும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

அதே போல இன்னொரு ட்விட்டர் பயனர், “கமல்ஹாசன் : விலையிறங்குவாயா வெங்காயமே? என்ன வெங்காயத்து கூட பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காரு” என்று பகடி செய்துள்ளனர்.

இத்தகைய கிண்டல்களுக்கும் பகடிகளுக்கும் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்கள் பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இந்த கிண்டல்கள் குறித்து, மக்கள் நீதி மய்யம் ஆதரவாளர் ஒருவர் கமல்ஹாசன் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கயை சுட்டிக்காடி, “இந்த அறிக்கை விடும்போது எல்லாம் வாய் மூடி கொள்வார்கள். இன்று வந்து அரசை கேள்வி கேட்காமல் வெங்காயத்தை கேட்கிறார் என்று வெங்காயம் போல் பேசுவார்கள்” என்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kamal haasan criticize on onion price high netizens teasing kamal haasan tweet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X