அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், கர்நாடக சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர்களின் மேசையில் அம்பேத்கர் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் பி.ஆர்.அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்ததற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான கடும் விமர்சனத்தை முடுக்கிவிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முதல்வருமான சித்தராமையா, அம்பேத்கரின் அரசியல் சாசனம் இல்லாவிட்டால் அமித்ஷா ஒரு ஸ்கிராப் டீலராக இருந்திருப்பார் என்று கூறினார்.
மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உண்மையிலேயே அரசியலமைப்பின் கீழ் செயல்பட்டிருந்தால், அவர் அமித்ஷாவை உடனடியாக சபையில் இருந்து இடைநீக்கம் செய்திருக்க வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரின் கூச்சலுக்கு மத்தியில் சட்டசபையில் விரிவான அறிக்கையைப் படித்த சித்தராமையா, பாபாசாகேப் அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் பேசிய "இழிவான" வார்த்தைகளை நாடு முழுவதும் கேட்டுள்ளது என்றார்.
ராஜ்யசபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. பலமுறை கடவுள் பெயரை கூறியிருந்தால் அவர்களுக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.” என்று கூறினார். அமித்ஷாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடரில், காங்கிரஸ் தலைவர்கள் பெஞ்ச்களில் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சமீபத்தில் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமித்ஷாவின் பேச்சு இந்திய அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கரை அவமதித்ததாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினர்.
The Treasury Benches in Karnataka Assembly is chanting Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar, Ambedkar,… pic.twitter.com/MOFMJRsmMw
— Priyank Kharge / ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ (@PriyankKharge) December 19, 2024
அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் கர்நாடக சட்டசபையில் நிலவும் அமளிக்கு பதிலளித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே வியாழக்கிழமை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பெஞ்ச்களில் "அம்பேத்கர்" என்று மீண்டும் மீண்டும் கோஷமிட்டதை கார்கே முன்னிலைப்படுத்தினார்:
கூட்டத்தொடரின் தொடக்கத்தில் காங்கிரஸ் எம்எல்சி பி.கே.ஹரிபிரசாத் அம்பேத்கர் புகைப்படத்தை ஏந்தி, உடனடியாக விவாதம் நடத்தக் கோரினார். "அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர் அவமதிக்கப்பட்டுள்ளார்," என்று அவர் வாதிட்டார். அதே நேரத்தில், பா.ஜ.க எம்எல்சி சி.டி.ரவி, அம்பேத்கரை வரலாற்று ரீதியாக அவமதித்தது யார் என்ற விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸின் கடந்தகால நடவடிக்கைகளைக் குறிப்பிட்டார்.
சட்டசபைத் தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முதலில் விவாதத்தை அனுமதிக்க ஒப்புக்கொண்டார், ஆனால், பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார், அமித்ஷா தன்னை தற்காத்துக் கொள்ள சபையில் இல்லை என்று கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் அம்பேத்கர் புகைப்படங்களை அசைத்து, அமித்ஷா மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் கருத்து வேறுபாடு மோதலாக மாறியது. கர்நாடக சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர்களின் மேசையில் அம்பேத்கர் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.