அசாமில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெய்து வரும் கனமழையால், பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அசாமில் 30 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார், 3,533 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மழை வெள்ளத்தால் ஜூன் மாதம் முதல் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 24லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் உள்ளனர்.
அசாமில் பெய்து வரும் கனமழையால், காசிரங்கா தேசிய பூங்கா மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சுமார் 15 லட்சம் விலங்குகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. 6 காண்டாமிருகங்கள், 94 மான்கள் உட்பட114 விலங்குகள் உயிரிழந்துள்ளன.
காசிரங்கா தேசியப் பூங்கா மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கே உள்ள யானைகள் மேட்டு நிலப் பகுதிகளில் ஏறி உயிர் தப்பியுள்ளன. தொடர் வெள்ளம் காரணமாக காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள யானைகள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் என்ற எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருக்க, யானைகள் ஒரு பெரிய மேட்டில் கூட்டமாக ஏறி உயிர் தப்பியிருக்கின்றனர். பின்னர், யானைகள், உயரமான பாதுகாப்பான இடங்களைத் தேடி கூட்டமாக செல்கின்றன.
இந்த வீடியோ குறித்து காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தொடர் வெள்ளம் காரணமாக, நமது கம்பீரமான யானைகள் பாதுகாப்பிற்காக உயரமான இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. யானைகள் இந்த சவாலான காலங்களில் அவைகள் செல்லும்போது விழிப்புடன் இருப்போம், அவைகளுக்கு இடம் கொடுப்போம். உங்கள் ஆதரவு அவற்றின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த உதவுகிறது.” என்று பதிவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“