கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஒரு வினோத திருவிழா நடைபெறுகிறது. அதில் ஆண்கள் சேலை அணிந்து, பளபளக்கும் நகைகள் அணிந்து அழகான ஒப்பனையுடன் ஒரு தனித்துவமான சடங்கில் பங்கேற்கிறார்கள். இந்திய ரயில்வே அதிகாரியான ஆனந்த் ரூபனகுடி, சமயவிளக்கு திருவிழாவின் போது பெண் வேடமிட்ட ஆண் ஒருவரின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் இது ஆணா என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டம்குளகராவில் உள்ள தேவி கோயிலில் சமயவிளக்கு விழா என்ற திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. உண்டு. பெண் வேடமணிந்த ஆண்களால் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த படம் போட்டியில் ஒப்பனைக்கு முதல் பரிசை வென்றவரின் படம்” என்று ரூபனகுடி குறிப்பிட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கேரள சுற்றுலாத் துறை வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, கோட்டம்குளகரா சமயவிளக்கு திருவிழா - விளக்குகளின் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இது மலையாள மாதமான மீனத்தின் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மார்ச் இரண்டாம் பாதியில் கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழாவில், ஆண்கள் பெண் வேடமிட்டு கைகளில் விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலம் நடத்துவார்கள். இந்த் திருவிழாவில் கேரளா முழுவதிலும் இருந்து ஆண்கள் புடவை உடுத்தி, நகைகள் மற்றும் ஒப்பனை அணிந்து இந்த தனித்துவமான சடங்கில் பங்கேற்கின்றனர். பெண் வேடமிட்ட ஆண்கள் தெய்வீகமான சமயவிளக்கை ஏந்திக்கொண்டு கோயிலைச் சுற்றி வல வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள் என்று கேரள சுற்றுலாத் துறை இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த திருவிழா கேரளாவில் திருநங்கைகளின் மிகப்பெரிய கூட்டமாக மாறியுள்ளது. ஏனெனில், இது அவர்களின் அடையாளத்தை கொண்டாட ஒரு இடத்தை வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"