By: WebDesk
Updated: September 12, 2018, 11:36:42 AM
மீனவர் ஜெய்ஷாலு
கேரளாவில் பெருவெள்ளம் வாட்டிவதைத்த போது, பெண்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல உதவிய மீனவர் ஜெய்ஷாலு க்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர் ஜெய்ஷாலு:
கடவுளின் தேசமான கேரளா இதுவரை சந்தித்திராத மாபெரும் இழப்பை கடந்த மாதம் சந்தித்தது. வரலாறு காணாத வெள்ளம் மக்களை வாட்டி வதைத்தது. இந்தியாவின் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கேரளா வெள்ள பாதிப்பு அம்மாநிலத்தில் பல உயிர்களை காவு வாங்கியதோடு, பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியது.
இந்த துயரத்தில் இருந்து பொதுமக்களை மீட்க அரசாங்கத்துடன் மீனவர்களும், இளைஞர்கள் பலரும் களத்தில் குதித்தனர். களத்தில் இறங்கி பொது மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த பலரில் மீனவர் ஜெய்ஹாலும் ஒருவர். இவர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட போது மழை வெள்ளத்தில் சிக்கிய சில பெண்களை காப்பாற்றி படகில் ஏற்றினார். அப்போது சில பெண்கள் படகில் ஏற சிரமப்பட்டனர்.
இதை பார்த்த மீனவர் ஜெய்ஷாலு, வெள்ள நீரில் படுத்து தனது முதுகையே படியாக்கி பெண்கள் படகில் ஏற உதவினார். மனிதாபிமானமிக்க இவரது இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.
இந்த நிலையில் மீன்வர் ஜெய்ஷாலுவின் இந்த சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் அவருக்கு புதிய காரை பரிசாக வழங்கி உள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மந்திரி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு காரை மீனவர் ஜெய்சாலுவிடம் வழங்கினார்.
இதுபற்றி அவர் கூறிய உருக்கமான பதிவு, “ நான், எதையும் எதிர்பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில்தான் வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டேன். எனக்கு இது போன்ற பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைக்க வில்லை. இந்த காரையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவேன் என்றார்.